அந்தக் காரணத்துக்காக என் பெயர் சொல்லி அழைக்க மாட்டார் ரிஷி கபூர்.. பிருத்வி ராஜ் சொன்ன தகவல்!
மும்பை: ரிஷி கபூருடன் இந்தி படத்தில் நடித்துள்ள பிருத்விராஜ், தன்னை பெயர் சொல்லி அவர் அழைத்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர். பிரபல நடிகர் ராஜ்கபூரின் மகனான இவர், ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார்.
சில படங்களை இயக்கியும் சில படங்களைத் தயாரித்தும் உள்ளார். நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

உயிரிழப்பு
இவரது உடல்நிலை திடீரென மோசமானதை அடுத்து மும்பையில் உள்ள, ஹெச்.என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர், இன்று காலை உயிரிழந்தார். முன்னதாக, ரிஷிகபூரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் என்றும் அவருடைய சகோதரர் ரன்தீர் கபூர் தெரிவித்திருந்தார்.

உடல் நலக்குறைவு
கேன்சருக்காக, அமெரிக்காவில் ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த ரிஷி கபூர், கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு திரும்பினார். இந்தியா திரும்பிய பின்னரும் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு ஏராளமான நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சோகமான வாரம்
தற்போது ஜோர்டானில் இருக்கும் நடிகர் பிருத்விராஜூம் இரங்கல் தெரிவித்துள்ளார். பிருத்விராஜ் மறைந்த நடிகர் ரிஷி கபூருடன், அவுரங்கசீப் என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது. பிருத்விராஜ் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், சினிமாவுக்கு இது சோகமான வாரம். ரிஷிகபூருடன் அவரங்கசீப் படத்தில் நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

பெயர் சொல்லி
அந்தப் படப்பிடிப்பின்போது அவர் ஒருபோதும் என்னைப் பெயர் சொல்லி அழைத்ததில்லை. அவர் தாத்தாவின் பெயராக இருப்பதால் என்னைப் பெயர் சொல்லி அழைக்க முடியாது என்பார்' என்று தெரிவித்துள்ளார். ரிஷி கபூரின் தாத்தா பெயர் பிருத்விராஜ் கபூர். இந்த படப்பிடிப்பின்போது ரிஷி கபூரை சந்தித்ததை பற்றி பிருத்விராஜின் மனைவி சுப்ரியாவும் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











