Amaran: மலையாளப் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் காட்சி.. அமரனுக்கு முன்பே சேட்டன்கள் செய்த சம்பவம்
சென்னை: சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் அமரன். இப்படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பயோபிக் படம் ஆகும். இந்தப் படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ் கமல் நிறுவனம் இணைந்து தயாரித்தது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்நிலையில் 2015ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ஒன்றில் மேஜர் முகுந்த் வரதராஜன் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே கூறியதைப்போல் தமிழ்நாட்டினைச் சேர்ந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்டு படத்தினை எடுப்பதால், படத்தின் காட்சிகள் பெரும்பாலும், இந்திய ராணுவத் தளவாடங்களுக்கு நேரடியாகச் சென்று படத்தினைக் காட்சிப் படுத்தியுள்ளனர். இதற்காக இந்திய உள்துறை அமைச்சகத்திடம் படத்தின் கதையைக் ஒப்படைத்து, ஒப்புதல் பெற்று, படத்தின் படப்பிடிப்புகளை நடத்தினர். படம் வசூல் ரீதியாக ரூபாய் 200 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுமட்டும் இல்லாமல், படம் விரைவில் ரூபாய் 250 கோடிகளை வசூல் செய்யும் எனவும் கூறப்படுகின்றது.

எதிர்ப்பு: படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் காஷ்மீரி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாகவும், நிராயுதபாணியாக இருக்கும் ஒருவரை கதாநாயகன் சுடுவது என்பது, போர் விதிகளை மீறும் செயல் எனவும் அரசியல் இயக்கத்தினர் பலரும் தெரிவித்து, படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படியான நிலையில் இணையத்தில் குறிப்பாக சமூக வலைதளங்களில் மலையாளப் படம் ஒன்றின் காட்சிகள் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

பிக்கெட் 43: அதில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் மறைவு தொடர்பாக விவாதிக்கப்படுகின்றது. கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் பிக்கெட் 43. இந்தப் படம் இந்திய ராணுவ வீரர்கள் தொடர்பான படம். படத்தினை ஓய்வு பெற்ற இந்திய ராணுவ மேஜர் ரவி இயக்கியுள்ளார்.
படத்தில் பிரித்விராஜ் சுகுமாறன், ஜாவத் ஜெஃப்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் கதையை மோகன் லால் சொல்வதைபோல் இயக்கியுள்ளார் மேஜர் ரவி. பிக்கெட் 43 படத்தில் இடம் பெற்றுள்ள காட்சியில், பிரித்விராஜ் சுகுமாறன், "முகுந்த் சார் இறந்துட்டாரா? ஐய்யய்யோ அவருக்கு 3 வயசுல குழந்தை இருக்கே" என சக ராணுவ நண்பருடன் பேசும்போது கூறுவார்.

அமேசான்: படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை மலையாள சினிமா உலகில் பெற்றது. மேஜர் முகுந்த் வரதராஜன் இறந்து ஒரு வருடகாலத்தில் இப்படம் வெளியானது. படத்தினை ஓய்வு பெற்ற இந்திய ராணுவ மேஜர் ரவி இயக்கியதால், ராணுவ வீரர்களின் அன்றாட வாழ்க்கை குறித்து நுணுக்கமாக காட்சிப் படுத்தியதற்காக பெரும் பாராட்டுகளைப் பெற்றார். மொத்தம் 167 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது. மேலும் படம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையிலான நட்பு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என சிறப்பாக காட்சி படுத்தியிருந்தார்.



Click it and Unblock the Notifications











