இந்தியாவில் இதுதான் பர்ஸ்டாம்.. பிருத்விராஜ் நடிப்பில் விர்ச்சுவல் தொழில்நுட்பத்தில் உருவாகும் படம்!
சென்னை: நடிகர் பிருத்விராஜ் மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே இடம்பெற்று வந்த மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவிலும் படம் உருவாக இருக்கிறது.
இந்த புதிய தொழில்நுட்பத்தில் உருவாகும் படத்தில், மலையாள நடிகர் பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார்.

மெய்நிகர் தயாரிப்பு
ஹாலிவுட்டில் சில படங்கள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாகி உள்ளன. அவதார், தி லயன் கிங் ஆகிய படங்கள் இந்த மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் உருவான படங்கள். திரைப்படங்களில் வழக்கமாக கிரீன் மேட் எனப்படும் பச்சை வண்ணச் சுவர் அல்லது திரைகளுக்கு முன்னால் எடுக்கப்பட்டு பின்னர் அதை கிராபிக்ஸில் தேவையான விஷயங்களை சேர்த்து காட்சியை தத்ரூபமாக மாற்றுவார்கள்.

எல்ஈடி திரைக்கு முன்
இந்த மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் ஸ்டுடியோவுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான எல்ஈடி திரைக்கு முன் நடிகர், நடிகைகள் நிற்பார்கள். திரையின் பின்னால் காட்சிகள் ஓட, முன்னால் நிற்கும் நடிகர்களின் நடிப்பை படமாக்குவார்கள். இந்த தொழில்நுட்பத்தில் ஏற்கனவே, 'என்னு நிண்டே மொய்தீன்' பட இயக்குநர் ஆர்.எஸ். விமல், இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.
Recommended Video

ஆச்சரிய அத்தியாயம்
இந்நிலையில், இன்னொரு படமும் இந்த தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இதை கோகுல்ராஜ் பாஸ்கர் இயக்குகிறார். மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் பிருத்விராஜும் தயாரிக்கிறார். இத்தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ள பிருத்விராஜ், 'சினிமாவில் இது ஓர் ஆச்சரியமான அத்தியாயம். ஆர்வத்துடன் இதை எதிர்நோக்கி இருப்பதாகக் கூறியுள்ளார்.

வாரியம்குன்னன்
கூடவே அதன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அதில் மெய்நிகர் தொழில் நுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய திரைப்படம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படம், மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாக இருக்கிறது. பிருத்விராஜ், இப்போது ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்து மலபார் புரட்சியை மையமாக வைத்து உருவாகும் வாரியம்குன்னன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











