Aadujeevitham Box Office: குவியும் கூட்டம்.. ’குட் ஃபிரைடே’ விடுமுறையில் கல்லா கட்டிய ஆடு ஜீவிதம்!
சென்னை: பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் தனது உடலையும் உயிரையும் கொடுத்து நடித்துள்ள ஆடு ஜீவிதம் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படியும் உருகும்படியும் அமைத்த விதத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் முதல் ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் குட் ஃபிரைடே விடுமுறையையும் சரியாக பயன்படுத்திக் கொண்டது.
இந்த வாரம் வியாழக்கிழமை பக்கா ஸ்கெட்ச் போட்டு 4 நாள் தொடர்ந்து படம் ஓடினாலே பெரிய லாபத்தை ஈட்டி விடலாம் என நினைத்து பிரித்விராஜ் இந்த படத்தை இறக்கியிருக்கிறார்.

முதல் நாளில் 16.7 கோடி ரூபாய் வசூலுடன் உலகளவில் ஆடு ஜீவிதம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக பிருத்விராஜ் சுகுமாரன் நேற்று அதிகாரப்பூர்வமாகவே வசூல் அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், 2ம் நாள் வசூல் எப்படி இருக்கு என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
ஆடு ஜீவிதம்: பொன்னியின் செல்வன் உள்ளிட்ட நாவல்களை படமாக்க இயக்குநர்கள் சமீப காலமாக முயற்சி செய்து வருகின்றனர். அதே போல நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் படமாக்கி வருகின்றனர். ரியல் லைஃப் சர்வைவல் த்ரில்லர் படங்களை பார்க்க எப்போதுமே ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஆடு ஜீவிதம் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட இந்த படத்துக்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் சிக்கல்: தனுஷ், பார்வதி நடிப்பில் வெளியான மரியான் படத்தை போலவே இருக்கு என ரசிகர்கள் அதிகமாக தமிழ்நாட்டில் முதல் நாள் படத்தை பார்க்க அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பல விமர்சகர்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஷோக்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஆரம்பித்துள்ளன.
கேரளாவில் கூட்டம்: பிரேமலு, பிரமயுகம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் என ஹாட்ரிக் அடித்துள்ள மலையாள சினிமா தனது 4வது வெற்றியை இந்த ஆண்டு பதிவு செய்யும் முடிவுக்கு வந்து விட்டது. முதல் நாளிலேயே கேரளாவில் 8 கோடி ரூபாய் வரை இந்த படத்துக்கு வசூல் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று குட் ஃபிரைடே விடுமுறையிலும் தியேட்டர்களில் கூட்டம் குவிந்து விட்டது. கொச்சின் உள்ளிட்ட இடங்களில் டிக்கெட்டுகள் ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் விற்றுத் தீர்ந்து விட்டதாக கூறுகின்றனர்.
2 நாள் வசூல்: உலகம் முழுவதும் ஆடு ஜீவிதம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மலையாளத்தில் இருந்து மீண்டும் ஒரு உலக சினிமா என்றே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 2018 படம் ஆஸ்கர் போட்டிக்கு கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட நிலையில், ஆடு ஜீவிதம் படத்தை அடுத்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கைகள் குவிந்து வருகின்றன. முதல் நாள் முடிவில் 16.7 கோடி ரூபாய் வசூல் செய்த ஆடு ஜீவிதம் திரைப்படம் 2ம் நாளில் 15.2 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 31 கோடிக்கும் மேல் 2 நாட்களில் வசூல் ஈட்டியிருப்பதாகவும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் விடுமுறையுடன் சேர்ந்து 50 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











