ப்ரியா பவானி சங்கர் காட்டில் மழை தான்: முதலில் கமல், இப்போ விக்ரம்
சென்னை: அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேயாத மான் படம் மூலம் பெரிய திரைக்கு வந்த ப்ரியா பவானி சங்கர் வளர்ந்து கொண்டே இருக்கிறார். அவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் மாபியா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ப்ரியா பவானி சங்கருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

விக்ரம் 58
இமைக்கா நொடிகள் படம் புகழ் அஜய் ஞானமுத்து சீயான் விக்ரமை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். தற்போதைக்கு விக்ரம் 58 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் சீயானுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிப்பார் என்று கூறப்படுகிறது. விக்ரம் 58 படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் வசனம் எழுதுகிறார். படப்பிடிப்பு ஐரோப்பா மற்றும் கானாவில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரியா
ஷங்கர் உலக நாயகன் கமல் ஹாஸனை வைத்து எடுக்கும் இந்தியன் 2 படத்தில் ப்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ப்ரியாவின் கதாபாத்திரம் படம் முழுக்க வருமாம். ப்ரியா அடுத்த மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம். இந்தியன் 2 படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷால்
ப்ரியா விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து இன்று நேற்று நாளை 2 படத்திலும் நடிக்கிறார். சத்தமில்லாமல் படுவேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறார் ப்ரியா. கமல், விக்ரம் என்று முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். முன்னதாக ப்ரியா எஸ்.ஜே. சூர்யாவுடன் சேர்ந்து நடித்த மான்ஸ்டர் படம் சூப்பர் ஹிட்டானது.

விக்ரம்
ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கடாரம் கொண்டான் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து இது போன்று வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிங்க சீயான் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் விக்ரம் அஜய் ஞானமுத்து படத்தில் நடிக்கிறார். விக்ரம் 58 படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











