நினைவுகள் மறைவதில்லை... கல்யாண போட்டோவை வெளியிட்டு பிரியதர்ஷன் உருக்கம்
சென்னை: தனது திருமண நாளான இன்று, திருமண புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு உருக்கமாகப் பதிவிட்டுள்ளார், இயக்குனர் பிரியதர்ஷன்.
தமிழில், சின்னமணிக்குயிலே, கோபுர வாசலிலே, லேசா லேசா, காஞ்சிவரம், நிமிர் ஆகிய படங்களை இயக்கியவர், மலையாள இயக்குனர் பிரியதர்ஷன். இந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ளார். இவரும் மலையாள நடிகை லிஸியும் காதலித்து வந்தனர்.

1993 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும் சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். கல்யாணி, படங்களில் நடித்துவருகிறார்.
கருத்து வேறுபாடு காரணமாக, பிரியதர்ஷனும் லிசியும் கடந்த 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதனால் 24 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. இந்தப் பிரிவில் இருந்து பிரியதர்ஷன் இன்னும் மீளவில்லை என்று தெரிகிறது.
இன்று அவர்கள் திருமண நாள். விவாகரத்து பெற்றாலும் திருமண நாளை மறக்க முடியாத பிரியதர்ஷன், திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதில் கேப்ஷனாக, 'நினைவுகள் மறைவதில்லை... 1990 டிசம்பர் 13' என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











