Oscars 2025: இந்தியாவின் நம்பிக்கை இப்படி ஆகிடுச்சே.. பிரியங்கா சோப்ராவின் அனுஜாவுக்கு ஆஸ்கர் இல்லை!
லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கவனிக்கப்படும் விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. 97ஆவது முறையாக நடக்கும் இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பிரியங்கா சோப்ரா தயாரித்த அனுஜா எனும் குறும்படம் விருதின் ஃபைனல் ரேஸில் இருந்தது. ஆனால் அந்தப் படத்துக்கு விருது எதுவும் கிடைக்கவில்லை.
ஆஸ்கர் விருதுக்கென்று தனி மவுசு இருக்கிறது. அந்த விருதினை பெற்றுவிட்டால் உலக அளவில் கவனம் பெறலாம். தமிழ்நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக பெற்றார். அதனையடுத்து அவரது புகழ் உலக அளவில் மேற்கொண்டு உயர்ந்தது என்பது அனைவரும் அறிந்தது. இதன் காரணமாக அந்த விருதினை பெறுவதற்காக அனைத்து நாடுகளில் இருந்தும் சினிமா படைப்பாளிகளும் உச்சக்கட்ட ஆர்வத்தோடு இருப்பார்கள்.

97ஆவது ஆஸ்கர் விருதுகள்: சூழல் இப்படி இருக்க 97ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் டால்பி திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல நாட்டிலிருந்து வெளியான திரைப்படங்கள், குறும்படங்கள் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தன. இந்தியாவிலிருந்து லபடா லேடீஸ், ஆல் வி இமேஜின் அஸ் லைட் போன்ற படங்கள் நாமினேட் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அனுஜா என்ற குறும்படம் மட்டுமே நாமினேட் ஆனது.
பிரியங்கா சோப்ராவின் அனுஜா: அனுஜா எனும் குறும்படத்தை பிரியங்கா சோப்ராவும், குனீத் மோங்கா, சுசித்ரா மட்டாய் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்திருந்தார்கள். டெல்லியில் வாழும் அனுஜா என்ற 9 வயது சிறுமி மற்றும் அவரது சகோதரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்தக் குறும்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை ஆடம் ஜே.க்ராவ்ஸ் இயக்கியிருந்தார். மிகப்பெரிய வரவேற்பை இந்தியாவில் இக்குறும்படம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு: இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் இந்த குறும்படம் வரவேற்பை பெற்றது. மேலும் 97ஆவது ஆஸ்கர் விருதுகளில் இந்தியா சார்பில் நாமினேட் ஆன ஒரே படைப்பு இது என்பதாலும், ஏற்கனவே 2022ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதினை The Elephant Whisperers என்ற ஆவணப்படத்தை தயாரித்ததால் குனீத் மோங்கா பெற்றதாலும் அனுஜா குறும்படமும் ஆஸ்கர் விருதை கண்டிப்பாக பெறும் இந்திய ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தது.
விருது இல்லை: ஆனால் அனுஜா குறும்படம் I'm Not A Robot என்ற சைன்ஸ் ஃபிக்ஷன் குறும்படத்திடம் விருதினை பறிகொடுத்தது. I'm Not A Robot குறும்படம் டச்சு - ஆங்கில மொழியில் உருவானது ஆகும். இந்தக் குறும்படத்தை விக்டோரியா வார்மெர்டாம் இயக்க; ஹென்ரி கில்லெட், விம் கொசென்ஸ் உள்ளிட்டோர் தயாரித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











