அஜித் படத்துல தயிர் சாதமா நடிச்சவங்களா இப்படி மாறிட்டாங்க?.. தமிழில் பேசி அசத்திய உபேந்திரா மனைவி!
சென்னை: கன்னட நடிகர் உபேந்திரா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு முன்பாக தமிழ் சினிமாவில் ஏற்கனவே சில படங்களில் நடித்த நடிகை பிரியங்கா உபேந்திரா மீண்டும் தமிழில் நடித்துள்ள திரைப்படம் விரைவில் வெளியாகிறது.
அந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த நடிகை பிரியங்கா உபேந்திரா தமிழில் பேசுவதை கேட்டு ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அஜித் குமார், ஜோதிகா நடிப்பில் வெளியான ராஜா படத்தில் இன்னொரு ஹீரோயினாக பிரியங்கா நடித்திருப்பார். மேலும், சில தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கூலி படத்தில்: கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நடிகர் உபேந்திரா தமிழில் ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடித்து வருகிறார். கூலி படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அமீர்கான் அந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உபேந்திராவின் மனைவியும் தமிழில் பல ஆண்டுகள் கழித்து என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

உபேந்திராவின் மனைவி: 46 வயதாகும் நடிகை பிரியங்கா நடிகர் உபேந்திராவை கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா உபேந்திரா மற்றும் ஆயுஷ் உபேந்திரா என இரு குழந்தைகள் உள்ளனர். 'உக்கிரவதாரம்' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்த காத்திருக்கிறார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரியங்கா நடித்திருப்பதாக ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறினார்.
தயிர் சாதம்: 1997ம் ஆண்டு ஜோத்தா எனும் வங்காள மொழிப் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பிரியங்கா. 1998ம் ஆண்டு படா டின் எனும் பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒடியா, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வந்த பிரியங்கா தமிழில் விஜயகாந்த் நடித்த ராஜ்ஜியம் படத்தின் மூலம் 2002ம் ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமானார். அதே ஆண்டு அஜித், ஜோதிகா, வடிவேலு நடிப்பில் எழில் இயக்கத்தில் வெளியான ராஜா படத்தில் தயிர் சாதம் கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

விக்ரமுடன் லிப் லாக்: 2003ம் ஆண்டு சியான் விக்ரம் நடித்த காதல் சடுகுடு படத்திலும் அப்பாவி பெண்ணாக நடித்திருப்பார். விக்ரமுடன் இவர் நடித்த லிப் லாக் காட்சி இன்னமும் இணையத்தில் ரசிகர்களால் அவ்வப்போது ஷேர் செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. ஐஸ், ஜனனம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா உபேந்திராவை திருமணம் செய்த பின்னர் தமிழில் நடிக்கவே இல்லை. வங்காளம் மற்றும் கன்னட படங்களில் மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழில் அழகாக பேசுறாரே: உக்ராவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்த பிரியங்கா உபேந்திரா பல வருடங்கள் கழித்து தமிழில் படம் பண்ணியது ரொம்பவே ஸ்பெஷலாக பார்க்கிறேன். எனக்கு தமிழ் மற்றும் தமிழ் மக்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ஆக்ஷன் கமர்ஷியல் படமாக நடித்திருக்கிறேன். நிச்சயம் உங்களுடைய சப்போர்ட் எனக்குத் தேவை. இன்னமும் பலர் என்னை பார்த்தால் தயிர் சாதம் என்றே அழைக்கும் அளவுக்கு அவர்கள் மனதில் நான் பதிந்திருப்பது மகிழ்ச்சி என்றார். வரும் நவம்பர் 1ம் தேதி இவர் நடித்துள்ள 'உக்கிரவதாரம்' படம் ரிலீஸாகிறது.


Click it and Unblock the Notifications











