Kamal: கர்நாடகாவில் கிழித்து வீசப்பட்ட தக் லைஃப் போஸ்டர்கள்.. கன்னட மொழி குறித்த கமலின் கருத்துக்கு எதிர்ப்பு!
பெங்களூரு: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. படத்தில் கமல்ஹாசன், சிம்பு, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 5ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் போஸ்டர்களை கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் கிழித்து வருகிறார்கள்.
தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னை புறநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவண்ணா என அழைக்கப்படும் சிவராஜ் குமார் கலந்து கொண்டார். அவர்தான் மேடையில் முதன் முதலாகவும் பேசினார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. இது மட்டும் இல்லாமல், சிவராஜ் குமார் இந்த படத்தில் நடித்துள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஓடிக்கொண்டு உள்ளது.

மொழி குறித்து பேச்சு: இந்த நிகழ்ச்சியில் கடைசியாக பேசிய படத்தின் தயாரிப்பாளர், நடிகர் கமல்ஹாசன் சிவராஜ்குமாரின் குடும்பம் குறித்து மிகவும் சிலாகித்து பேசினார். மேலும், கர்நாடகாவில் இருக்கும் எனது குடும்பம் தான் சிவராஜ்குமாரின் குடும்பம். நான் சிவராஜ் குமாருக்கு சித்தப்பா. அதனால்தான் சிவராஜ்குமார் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அதனால்தான் நான் எனது உரையைத் தொடங்கும்போது உயிரே, உறவே, தமிழே என்று சொல்லி ஆரம்பித்தேன். தமிழில் இருந்து தோன்றியதுதான் கன்னட மொழியும். அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள்" என்று கூறினார்.
போஸ்டர்கள் கிழிப்பு: இந்நிலையில் அவரது பேச்சுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் செய்து வருகிறார்கள். குறிப்பாக படத்தின் போஸ்டர் கர்நாடகாவில் எங்கு எல்லாம் ஒட்டப்பட்டுள்ளதோ, எங்கெல்லாம் படத்திற்காக விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளதோ அவற்றையெல்லாம் கிழித்து வருகிறார்கள். மேலும் கமல்ஹாசனுக்கு எதிராகவும் கன்னட அமைப்பினர் கோஷமிட்டு வருகிறார்கள். குறிப்பாக கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி ஊடகங்களிடம் பேசும்போது, "தமிழ் மொழி பிறந்த பிறகுதான் கன்னட மொழி பிறந்தது எனவும், கன்னடத்தை விட தமிழ் தான் சிறந்தது எனவும் கமல்ஹாசன் பேசியுள்ளார். எங்கள் அமைப்பின் சார்பாக கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். உங்கள் படத்திற்கு கர்நாடகாவில் வியாபாரமும் பணமும் வேண்டும். அப்படி இருந்தும் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா?

படம் ரிலீஸ் ஆகாது: இன்று நீங்கள் எங்கள் மாநிலத்திற்கு வந்தீர்கள். எங்கள் மொழியை அவமதித்த உங்கள் மீது கருப்பு மை பூச நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் நீங்கள் ஓடி விட்டீர்கள். கர்நாடகாவிற்கும் எங்கள் கன்னட மொழிக்கும் அதன் மக்களுக்கும் எதிராக பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். உங்கள் படங்கள் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது என்றும் நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











