இதோ அடுத்த பிரச்சினைய ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. அடுத்த டார்கெட் சந்தானம்.. ஏ1 படத்தை தடை செய்யனுமாம்!
சந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தை தடைசெய்யக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்து தமிழர் கட்சி மனு அளித்துள்ளது.
சென்னை: சந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தை தடைசெய்ய வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய இயக்குனர் சீசன் 4 டைட்டில் வின்னர் ஜான்சன்.கே இயக்கியுள்ள படம் ஏ1. அதாவது அக்யூஸ்ட் நம்பர் 1. இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக தாரா எனும் புதுமுக நடிகையும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இரண்டாவது டீசர் நேற்று மாலை வெளியானது. டீசர் செம கலாயலாக தான் இருந்தது. ஆனால் கூடவே ஒரு பிரச்சினையும் படத்துக்கு கொண்டு வந்துள்ளது.

லோக்கல் பையன் அஹ்ரகாரத்து பெண்
படத்தின் கதைப்படி சந்தானம் ஒரு லோக்கல் பையன். நாயகி தாரா அஹ்ரகாரத்துப் பெண். இருவரும் காதலிப்பது தான் படத்தின் கதை. 'ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை நிரூபிக்கும் அஹ்ரகாரத்து மாமி... மயங்கி விழுவது மாமியின் தோப்பனார்' என்பது உள்பட சில வசனங்கள் டீசரில் இடம்பெற்றுள்ளன.

வசனங்கள் தான் பிரச்சினை
இந்த வசனங்கள் தான் தற்போது பிரச்சினைக்கு காரணம். ஏ1 பட டீசருக்கு இந்து தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அக்கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் அளித்துள்ள புகார் மனுவில், " கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து சாதி சிறுபான்மையினராக இருக்கும் பிராமண சமுதாய வாழ்க்கை முறையை அவர்களுடைய நடைமுறையை கேலி கிண்டல் செய்தும், புண்படுத்தும் நோக்கில் ஏ1 பட டீசர் வெளியாகியிருக்கிறது.

கெட்ட உள்நோக்கம்
வேண்டுமென்றே சாதிக் கலவர நோக்கம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ள நிலையில் ஒரு வீணான பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற கெட்ட உள்நோக்கத்தோடு இந்த திரைப்படம் எடுக்கப் பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறோம். இது போன்று பிற சாதி பெண்களை பிற சாதிகளின் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தி யாரும் படம் எடுக்க முடியாது.

தடை செய்ய வேண்டும்
அப்படி இருக்கையில் இந்து சாதி சிறுபான்மை பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்திய இந்த திரைப்படத்தை தடை செய்திடவும், மேற்படி நடிகர் சந்தானம் ஜான்சன் ராஜநாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டியும் இந்த புகார் மனுவை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்", என குறிப்பிடப்பட்டுள்ளது.

படக்குழு அதிர்ச்சி
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள பல படங்கள் ரிலீசாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தில்லுக்கு துட்டு 2 படம் தான் சமீபத்தில் ரிலீசானது. ஏ1 படம் தனக்கு பெரிய வெற்றியை தரும் என சந்தானம் எதிர்பார்த்திருக்கிறார். இந்நிலையில் ஏ1 படத்துக்கு இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டிருப்பது படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இருப்பினும் படத்துக்கு சென்சார் சான்று பெறப்பட்டுவிட்டதால், ரிலீசில் எந்த பிரச்சினையும் இருக்காது என அவர்கள் நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











