மதன் பாப்பின் மற்ற முகங்கள் தெரியுமா?.. இவ்வளவு நல்லவரா?.. யப்பா வேற லெவல் மனிதரா இருந்திருக்காரே
சென்னை: இசை கலைஞர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்ட மதன் பாப் கோலிவுட்டில் பிஸியான நடிகராக வலம் வந்தவர். கடந்த சில வருடங்களாகவே அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக சிகிச்சையும் எடுத்துவந்தார். எப்படியாவது உடல்நலம் தேறிவிடுவார் என்று எதிர்பார்த்திருந்த சூழலில்; சிகிச்சை பலனின்றி நேற்று அடையாறில் இருக்கும் அவரது இல்லத்தில் உயிரழந்தார்.
இசை கலைஞராக தனது திரை பயணத்தை தொடங்கியவர் மதன் பாப். அவரது இயற்பெயர் கிருஷ்ண மூர்த்தி. மிகச்சிறந்த கிட்டார் வாசிப்பாளராக இருந்தார். அவரது சகோதரர் பாபு சிறந்த ட்ரம்ஸ் கலைஞர். இதன் காரணமாகத்தான் தனது பெயரை மதன் என மாற்றி அதனுடன் பாப் என்று சேர்த்து மதன் பாப்பாக மாறினார். ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் மதன் பாப்பிடம் பணியாற்றியிருக்கிறார்கள். ஏகப்பட்ட இசை கச்சேரிகளையும் அவர் செய்திருக்கிறார்.
நடிகர் மதன் பாப்: இசை பயணத்தில் பிஸியாக இருந்த அவர் நீங்கள் கேட்டவை படத்தின் ஒரு பாடலில் தலை காண்பித்தார். பிறகு பாலசந்தர் இயக்கிய ஜாதி மல்லி திரைப்படத்தின் மூலம் முழு நேர நடிகராக மாறினார். தனது வித்தியாசமான முக பாவனைகள், சிரிப்பு என ஸ்கோர் செய்த அவர்; கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக வாஸ்ஸ்கோடாகாமா படத்தில் நடித்திருந்தார்.

உடல்நலம் பாதிப்பு: ஆரோக்கியமாக இருந்த அவருக்கு புற்றுநோய் இருப்பது சில காலத்துக்கு முன்பு கண்டறியப்பட்டது. அதனையடுத்து தீவிரமான சிகிச்சை எடுத்துவந்தார் அவர். எப்படியாவது இந்த புற்றுநோயிலிருந்து மீண்டுவிடலாம் என்று அவரும், அவரது குடும்பத்தினரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். குடும்பத்தாரை பொறுத்தவரை மதனுக்கு தேவையான அத்தனை சிகிச்சைகளையும் கொடுப்பதற்கு வழி செய்தார்கள்.
மரணமடைந்த மதன்: சூழல் இப்படி இருக்க அவர் நேற்று அடையாறில் இருக்கும் தனது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. திரைத்துறையினர் ஒவ்வொருத்தராக அங்கு சென்று அஞ்சலி செலுத்திவருகிறார்கள். மேலும் இன்று மாலை இறுதி சடங்குகள் நடக்கவிருக்கிறது. அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.
பாலாஜி பிரபு பேட்டி: இந்நிலையில் மதன் பாப் குறித்து பிரபல தயாரிப்பாளரான பாலாஜி பிரபு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "மதன் பாப் இயல்பாகவே ரொம்ப நல்ல மனிதர். அவருக்கு இசை மீது தீராத ஆர்வம் இருந்தது. இசை துறையில் வெல்ல வேண்டும் என்றுதான் அவர் சினிமாவுக்கு வந்தார். காலப்போக்கில் நடிகராக மாறிவிட்டார். அவர் விளம்பர படங்களுக்கு எல்லாம் இசையமைத்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானும் அவரிடம்தான் வாசித்தார்.
ஷூட்டிங்கில் நடந்தது: நான் அவரை வைத்து காதல் ரோஜா என்ற படத்தை தயாரித்தேன். அந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது ஃபெப்சி அமைப்பு சார்பாக நடந்த போராட்டத்தால் ஷூட்டிங் நடத்த தடை விதித்திருந்தார்கள். ஆனால் இரண்டு நாட்கள் மதன் பாப்பை வைத்து ஷூட் செய்ய வேண்டிய சூழல். அவரை தொடர்புகொண்டு கேட்டபோது, கண்டிப்பாக நான் வந்துவிடுகிறேன் என சொல்லிவிட்டு வந்து நடித்துக்கொடுத்தார். ஷூட்டிங் நடந்தபோது அங்கே வந்த ஃபெப்சி அமைப்பினர் பிரச்னை செய்தார்கள். மதன் பாப் அவர்களிடம் பேசி புரியவைத்தார். யாரிடமும் கோபமே படமாட்டார். இசை, நடிப்பு மட்டுமின்றி அருமையாக மிமிக்ரியும் செய்யக்கூடியவர். அவர் இறக்கும்வரை ஜென்டில்மேனாகவே இருந்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











