என் தாடையை உடைத்து மிரட்டினார்: பிரபல தயாரிப்பாளர் மீது நடிகை புகார்
Recommended Video

மும்பை: பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் தன்னை தாக்கி மிரட்டியதாக நடிகை ஃபுளோரா சைனி தெரிவித்துள்ளார்.
தனுஸ்ரீ தத்தாவின் துணிச்சலை பார்த்துவிட்டு பாலிவுட் நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசி வருகிறார்கள். அண்மையில் ரிலீஸாகி ஹிட்டான ஸ்த்ரீ படத்தில் நடித்த ஃபுளோரா சைனி தயாரிப்பாளர் கவுரங் தோஷி மீது புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஃபுளோரா தனது புகைப்படத்துடன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

தாக்குதல்
புகைப்படத்தில் இருப்பது நான் தான். 2007ம் ஆண்டு காதலர் தினத்தன்று நான் அப்போது காதலித்த பிரபல தயாரிப்பாளர் கவுரங் தோஷியால் தாக்கப்பட்டேன். ஓராண்டு காலமாக என்னை கொடுமைப்படுத்தினார். உடைந்த தாடையுடன் அந்த உறவில் இருந்து வெளியே வந்தேன். நான் இது குறித்து அப்போதே பேச நினைத்தேன்.

படங்கள்
சினிமா துறைக்கு புதிதாக வந்த நான் அதிகாரம் படைத்த தயாரிப்பாளர் பற்றி கூறினால் யார் என் பேச்சை கேட்பார்கள். மேலும் உன்னை சினிமாவில் இருந்து விரட்டிக் காட்டுகிறேன் என்று கவுரங் என்னை மிரட்டினார். மிரட்டியதோடு மட்டும் அல்லாமல் செய்தும் காட்டினார். நான் பல படங்களில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.

கொடுமை
யாருமே என்னை சந்திக்க விரும்பவில்லை. யாரும் என்னை ஆடிஷனுக்கு அழைக்கவில்லை. நான் தான் தவறு செய்துவிட்டேன் என்று நினைத்தேன். அதனால் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எங்காவது ஓடிப் போய்விடலாம் என்று தோன்றியது. எனக்கு பிறகும் பல பெண்கள் கவுரங் தோஷியிடம் சிக்கி என்னை போன்றே கஷ்டப்பட்டுள்ளனர். அவர்கள் உதவி கோரி என்னை அழைத்தனர். ஆனால் வெளியே சொல்ல அவர்களுக்கு தைரியம் இல்லை.
பெண்கள்
தைரியமாக பேசுபவர்களுக்காக இதை எழுதுகிறேன். தங்களிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் பற்றி பேச தைரியம் வேண்டும். கொடுமை செய்தவர் மறந்துவிடுவார். ஆனால் கொடுமையை அனுபவித்தவர் அதை ஒருபோதும் மறக்க மாட்டார். தைரியமாக பேசும் பெண்களை நினைத்து பெருமையாக உள்ளது. தைரியமாக பேசுபவர்களை தலை வணங்குகிறேன். அந்த சம்பவத்திற்கு பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது. என்னால் சரி செய்ய முடியாத அளவுக்கு மாறிவிட்டது. நமக்கு கடவுள் இருக்கிறார் அவரை எந்த ஆணாலும் கேள்வி கேட்க முடியாது என்பது எனக்கு தெரியும் என்று ஃபுளோரா சைனி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











