யூடியூப் கோமாளிகளா.. குரு பூஜை பற்றி தப்பா பேசலாமா?.. கோபி, சுதாகரை மிரட்டிய தயாரிப்பாளர் சௌத்ரி
சென்னை: பரிதாபங்கள் யூடியூப் சேனல் நடத்திவரும் கோபியும் சுதாகரும் சொசைட்டி பாவங்கள் என்ற பெயரில் வீடியோ வெளியிட்டார்கள். அந்த வீடியோவில் ஆதிக்க சாதியினரில் ஒருதரப்பினர் செய்யும் ஆணவ கொலை உள்ளிட்டவைகளை கடுமையாக பகடி செய்திருந்தார்கள். இந்நிலையில் அவர்களுக்கு தயாரிப்பாளர் சௌத்ரி என்பவர் எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
கோபியும், சுதாகரும் யூடியூப் உலகத்தில் ஃபேமஸானவர்கள். லட்சக்கணக்கான சப்ஸ்க்ரைபர்களை வைத்திருக்கும் அவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர்கள் வெளியிடும் வீடியோக்கள் எல்லாம் ரிலீஸான கொஞ்சா நேரத்திலேயே மில்லியன் கணக்கிலான வியூஸ்களை அள்ளக்கூடியவை. எந்த விஷயமாக இருந்தாலும் எதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் சொல்வது அவர்களது ஸ்டைல்.
ஆணவ கொலை: அப்படி அவர்கள் ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார்கள். அதாவது நெல்லையில் கவின் என்ற இளைஞரை சுர்ஜித் என்ற இளைஞர் ஆணவ படுகொலை செய்தார். அது தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெரியார் மண் என சொல்லப்படும் தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி ஆணவ கொலை நடந்துவருவது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என பலரும் கொந்தளித்தார்கள்.
சொசைட்டி பாவங்கள்: இந்தக் கொலை குறித்து பெரும்பாலும் அனைவருமே அமைதிதான் காக்கிறார்கள். ஆனால் பரிதாபங்கள் கோபி, சுதாகர், டிராவிட் உள்ளிட்டோர் இணைந்து சொசைட்டி பாவங்கள் என வீடியோவை வெளியிட்டார்கள். இந்த வீடியோவில் ஆதிக்க சாதியினர் செய்யும் அட்டூழியங்கள், இளைஞர்களை அவர்கள் எப்படி தவறான வழிக்கு அழைத்து செல்கிறார்கள் என அனைத்து விஷயங்களையும் போல்டாக பேசியிருந்தார்கள்.

குவியும் பாராட்டு: அவர்களது இந்த வீடியோ மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை மொத்தம் 21,000 கமெண்ட்ஸ்கள் அந்த வீடியோவுக்கு வந்திருக்கின்றன. அதேபோல் வீடியோ வெளியான ஒரே நாளில் 32 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். மேலும் பலரும் அந்த சேனலுக்கு நன்கொடையையும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் சௌத்ரி என்பவர் சொசைட்டி பாவங்கள் பற்றி வெளியிட்டிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சௌத்ரி பேசியது: அவர் அந்த வீடியோவில் பேசுகையில், "யூடியூப் கோமாளிகள் கோபி, சுதாகர் நீங்கள் காமெடி வீடியோக்கள் போடுங்கள், பல விஷயங்களை கிண்டல் செய்யுங்கள் அது எங்களுக்கு தேவையில்லை. சமீபத்தில் நீங்கள் வெளியிட்ட ஒரு வீடியோ எங்கள் சமுதாயத்தை குற்றவாளிகளாக காண்பிக்கிறது. அரசியல் தலைவர்கள் இப்படி பேசினார்கள். அவர்களை அரசியல் ரீதியாக நாங்கள் கண்டிக்கிறோம்.உங்களை போன்ற கோமாளிகளுக்கு என்ன வேலை. யூடியூப் நல்ல தளம். அதில் ஏராளமானோர் நல்ல விஷயங்களை சொல்கிறார்கள். ஆனால் உங்களை மாதிரி கோமாளிகள் இன்னொரு சமுதாயத்தை பற்றி தவறாக பேச யார் உங்களுக்கு எலும்பு துண்டுகள் போட்டது.
குரு பூஜை பற்றி பேசலாமா?: குரு பூஜையை பற்றி பேசுகிறீர்கள். அதுபற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. நீங்கள் வீடியோ போட வேண்டுமென்றால் வேறு வீடியோ போடுங்க. சமூக பதற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். சுர்ஜித் வாழ்க்கை இப்படி போய்விட்டதே என்பதை நினைத்துதான் எங்கள் சமூகம் வருத்தப்படுகிறது. சர்ச்சையாக போய்க்கொண்டிருக்கும் விஷயத்தை இப்படி அவர்கள் எடுத்து செய்வதை எப்படி காவல் துறை பார்த்துக்கொண்டிருக்கிறது. இது எங்கள் இளைஞர்களை தூண்டிவிடும்படி இருக்கிறது. எங்கே போய் இது முடியும். இந்த வீடியோவை தடை செய்ய வேண்டும்" என்றார். இதனைப் பார்த்த நெட்டிசன்ஸோ, கோபியையும் சுதாகரையும் சௌத்ரி மறைமுகமாக மிரட்டுகிறார். இவர்தான் இந்த விஷயத்தில் தூண்டிவிடுகிறார். எனவே இவர் மீது வழக்கு தொடர வேண்டும் என கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











