என் படத்துக்கு டைட்டிலை மாத்தி அவங்க ரிலீஸ் பண்ணப்போறாங்க... - 'சீமத்துரை' மீது தயாரிப்பாளர் புகார்
சென்னை : கீதன், வர்ஷா பொல்லம்மா, விஜி சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'சீமத்துரை'. புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் சுஜய் கிருஷ்ணா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சந்தோஷ் தியாகராஜன் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இப்படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான இமானுவேல் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் "சீமத்துரை என உருவாகியிருப்பது என்னுடைய படம். எனது படத்துக்கு டைட்டிலை மட்டும் மாற்றி சீமத்துரை என்ற பெயரில் வெளியிடுகிறார்கள்" என்று மோசடி புகார் கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்துள்ள புகார் மனுவில், "தயாரிப்பாளர் சுஜய் கிருஷ்ணா என்பவர் என்னை அணுகி நான் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன். என்னால் முழு பணமும் போடமுடியாது இருவரும் இணைந்து தயாரிப்போம் என்று அழைத்தார். அவரை நம்பி ஐ.ஜி.ஜே என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சீமானின் சீமாட்டி என்ற பெயரில் படம் தயாரித்தோம்.
இதற்காக நான் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்தேன். ஆனால் தயாரிப்பாளர் சுஜய் கிருஷ்ணாவும், இயக்குனர் சந்தோஷ் தியாகராஜனும் என்னை விரட்டிவிட்டார்கள். படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு என்னை அடியாட்களுடன் வந்து மிரட்டிச் சென்றார்கள்.
தற்போது படத்தின் பெயரை 'சீமத்துரை' என்று மாற்றி அவர்கள் மட்டுமே தயாரித்த படம் போன்று புதிய நிறுவனத்தின் பெயரில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். எனக்கு கொலை மிரட்டலும் விடுக்கிறார்கள். அவர்களைக் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார் இமானுவேல்.


Click it and Unblock the Notifications











