பராசக்தி படத்துக்கு சென்சார் பிரச்னை முடிந்ததா இல்லையா?.. இப்போதைய நிலைமை இதுதானாம்!
சென்னை: ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் அப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பராசக்திக்கும் இன்னும் சான்றிதழ் தரவில்லை என தெரிகிறது. எனவே அதுவும் திட்டமிட்டபடி ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
ஜனநாயகன் படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டு; அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் டிசம்பர் மாதமே படத்தை பார்த்துவிட்ட சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கவில்லை. மொத்தம் 27 இடங்களில் அவர்கள் சொன்ன மாற்றத்தை செய்தும்; ஜனநாயகன் படத்துக்கு சர்ட்டிஃபிக்கேட் கிடைக்கவில்லை. இதன் காரணமாக நீதிமன்றத்துக்கு சென்றது தயாரிப்பு நிறுவனம். நீதிமன்றமோ வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துவிட்டது.
ரிலீஸ் இல்லை: நாளைக்குத்தான் தீர்ப்பே வரும் என்று தெரிவதால்; திட்டமிட்டபடி சென்சார் சான்றிதழை வாங்கி ஒன்பதாம் தேதியே ரிலீஸ் செய்ய முடியாது என்பதால்; ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறது பட தயாரிப்பு நிறுவனம். விஜய்யின் கடைசி படத்துக்கு இப்படி ஒரு முட்டுக்கட்டையை போட்டுவிட்டார்களே என கொதிப்படைந்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இதற்கு அரசியல் பின்னணிதான் காரணம் என்றும் அடித்து சொல்கிறார்கள். ஆனால் பாஜக மற்றும் திமுகவினர் அதை மறுத்துவருகிறார்கள்.

பராசக்திக்கும் சிக்கல்?: ஜனநாயகன்தான் ரிலீஸ் ஆகவில்லை; பராசக்தியாவது ரிலீஸாகும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் இன்னமும் அப்படத்துக்கும் சென்சார் சான்றிதழ் வழங்கவில்லை என தெரிகிறது. ஆனால் எப்படியும் சான்றிதழ் கிடைத்துவிடும் என நம்பிக்கையில் அந்தப் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளை மும்முரமாக நடத்திவருகிறார்கள். நேற்றுகூட கேரளாவுக்கு தனி விமானத்தின் மூலம் சென்று ப்ரோமோஷம் செய்தார்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர்.
மௌனம் காக்கும் திரைத்துறை: இரண்டு படங்களும் சென்சார் சான்றிதழ் வாங்குவதில் நாக்கு தள்ளியிருக்கின்றன. ஆனால் திரைத்துறையிலிருந்து இந்த விவகாரத்தில் பெரிய அளவில் குரல்கள் எதுவும் எழவில்லை. ஜனநாயகனுக்கு ஆதரவாக ரவி மோகன், சிபி சத்யராஜ், சனம் ஷெட்டி, இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட சிலர் மட்டுமே குரல் கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்கள்.
நிர்வாகிகள் சொன்னது: அவர்கள் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், "தணிக்கை குழு ஒன்றிய அரசுடையது. அவர்கள் நிறைய மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். பான் இந்தியா படங்களுக்கு ஒரே நேரத்தில் அத்தனை மொழிகளிலும் சென்சார் செய்யும்படி கொண்டு வந்திருக்கிறார்கள். இதுமாதிரியான திட்டங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு வாரம் முன்னரே டிக்கெட் புக்கிங் தொடங்க வேண்டியதாக இருக்கிறது. சென்சார் சான்றிதழ் வந்தால்தான் டிக்கெட் புக்கிங்கை ஆரம்பிக்கும் நிலைமையும் உண்டு.
பராசக்திக்கு முடிந்துவிட்டது: அனைத்தையும் பார்த்துதான் அவர்கள் சான்றிதழ் கொடுக்கிறார்கள். படத்தை நிறுத்தி வைப்பது தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு இருக்கிறது. இரண்டு படங்களில் ஜனநாயகன் நீதிமன்றத்தில் இருக்கிறது. பராசக்தி படத்துக்கு முடிந்ததாக கேள்விப்பட்டோம். சீக்கிரம் வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். ஜனநாயகன் படத்துக்கு என்ன பிரச்னை என்று விளக்கமாக எங்களுக்கு தெரியாது" என்றார்கள்.


Click it and Unblock the Notifications











