ராதாரவியை விடமாட்டாங்க போலிருக்கே... கண்டன பட்டியலில் தயாரிப்பாளர் சங்கமும் சேர்ந்தது!
நடிகர் ராதாரவிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: நயன்தாரா குறித்து தவறாக பேசிய நடிகர் ராதாரவிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற கொலையுதிர் காலம் திரைப்பட விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, அப்படத்தின் கதாநாயகி நயன்தாரா குறித்து ஆட்சேபிக்கும் வகையிலான கருத்துகளை தெரிவித்தார். ராதாரவிக்கு நடிகை நயன்தாரா உள்பட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியில் இருந்து அவரை தற்காலிகமாக நீக்கினார். இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கவுரவ செயலாளர் துரைராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் நடைபெற்ற கொலையுதிர் காலம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையுலகில் மூத்த கலைஞரான நடிகர் ராதாரவி அவர்கள் குறிப்பிட்டு அத்திரைப்படத்தின் கதாநாயகியான நயன்தாரா அவர்களை மிகவும் கொச்சைப்படுத்தி பேசியும் மேலும் மற்ற நடிகைகளையும் கொச்சை படுத்துவதுபோல் இரட்டை அர்த்த வசனத்தில் பேசியது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
ராதாரவி திரைத்துறையில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தும் சக கலைஞரை தகாத வார்த்தைகளால் பேசுவது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் மற்ற மூத்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. திரைத்துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் ராதாரவி நகைச்சுவை என்ற பெயரில், கைதட்டலுக்காக இது போன்ற கொச்சையான பேச்சுக்களை பேசி வருகிறார். அது திரைத்துரை மட்டுமின்றி பொது வாழ்க்கையிலும் அவரது மேன்மையை குறைப்பது மட்டுமல்லாமல் ராதா ரவி மேல் உள்ள மதிப்பையும் மரியாதையும் குறைக்கிறது.
அது மட்டுமின்றி திரைத்துறையின்மேல் மக்களுக்கு நம்பிக்கையை சீரழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயலுக்காக நடிகர் ராதாரவிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துகொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











