முடிவுக்கு வந்தது வடிவேலு பஞ்சாயத்து; விரைவில் அதிரடியை ஆரம்பிக்கும் வைகைப் புயல்!
சென்னை: இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனை காரணமாக வடிவேலு மீது விதிக்கப்பட்ட தடை நீங்கி விட்டது.
"இது ரெட் கார்டு நீக்கும் வாரம்" என்றே சொல்லலாம். சமீபத்தில், தான் நடிகர் சிம்புவின் ரெட் கார்டு பிரச்சனையும் தீர்ந்தது.
அதனை தொடர்ந்து, ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வைகைப் புயல் வடிவேலுவின் பஞ்சாயத்தும் பைசல் ஆகி விட்டது.

நடிக்காமல் இருந்தாலும்
தயாரிப்பாளர் சங்கம் போட்ட தடை காரணமாக நடிகர் வடிவேலு சினிமாவில் நடிக்க முடியவில்லை என்றாலும், அவரது மீம்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகாத நாட்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர்.

24ம் புலிகேசி பஞ்சாயத்து
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான வடிவேலுவின் இம்சை அரசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து ஷங்கர் தயாரித்த 24ம் புலிகேசி திரைப்படம் ஆரம்பமான நிலையில், நடிகர் வடிவேலு அதிக சம்பளம், பாடலை மாற்றுவது, ஒப்பனை கலைஞரை மாற்றுவது என சில பல நிபந்தனைகளை விதித்தது பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்தது.

நடிக்க முடியாத அளவுக்கு
இனிமே எந்த ஒரு புதிய படங்களிலும் நடிகர் வடிவேலு நடிக்க முடியாத படி தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் இயக்குநர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் அவருக்கும் ஒரு ரெட் கார்டை போட்டு விட்டது. நடிகர் சிம்புவை போல வடிவேலுவால் ரெட் கார்டு தடையை மீறி நடிக்க முடியவில்லை. சில படங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் வில்லங்கம் பெரிதாகி அவரை வெளியேற்றும் நிலைக்கு கொண்டு வந்தது.

ரசிகர்கள் விருப்பம்
மீண்டும் பழையபடி வடிவேலு தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். நடிகர் வடிவேலுவும் பழைய பிரச்சனைகளை சரி கட்டும் முயற்சியில் இறங்கிய நிலையில், பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இந்த பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

பிரச்சனை முடிந்தது
லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில், ஷங்கரை வைத்து இந்தியன் 2 படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் இந்த விவகாரத்தில் தலையிட அதன் பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் சமரசம் நடந்த நிலையில், வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கம் போட்ட தடையை நீக்கிக் கொள்வதாக தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்தது. கடவுள் அருளால் இந்த நல்ல காரியம் நடந்துள்ளதாக நடிகர் வடிவேலு நன்றி தெரிவித்துள்ளார்.

விரைவில் வருகிறார்
மீம் கிரியேட்டர்களுக்கு புதிய மீம் டெம்பிளேட்டுகளை அள்ளிக் கொடுக்க விரைவில் வைகைப் புயல் வடிவேலு வெர்ஷன் 2.0 வாக வரவுள்ளார். இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் மீண்டும் உருவாகுமா? என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், லைகா தயாரிப்பில் தான் வடிவேலும் புதிய படம் மட்டுமே இப்போதைக்கு உறுதியாகி உள்ளது.

சிம்புவும் ஃப்ரீ
நடிகர் வடிவேலுவை போலவே நடிகர் சிம்புவுக்கும் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருந்த நிலையில், அந்த பிரச்சனையும் பேச்சுவார்த்தை மூலமே நல்ல தீர்வை எட்ட சிம்பு மீது போடப்பட்டிருந்த தடையையும் தயாரிப்பாளர் சங்கம் நீக்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











