ரஜினி, கமல், விஜய், அஜித்... டாப் ஹீரோ படங்களுக்கு புதிய செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்!
முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்னை: ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும், சேலம் ஏரியா விநியோகஸ்தர்கள் கவுன்சில் நிர்வாகிகளும் அவசர ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிம்பு, ஜெயம்ரவி, ராகவா லாரன்ஸ் விக்ரம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இனி சேலம் ஏரியாவில் 45 டிஜிட்டல் பிரிண்டுகள் மட்டுமே ரிலீஸ் செய்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மற்ற அனைத்து நடிகர்களின் திரைப்படங்களுக்கும் 35 பிரிண்டுகள் மட்டுமே ரிலீஸ் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரிலீஸ் செய்ய முடியாத சிறிய பட்ஜெட் படங்களுக்கு 3 சதவீத சேவை கட்டணம் மட்டுமே பெற்றுக்கொண்டு, சேலம் ஏரியாவில் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த புதிய கட்டுபாடு டாப் ஹீரோக்களின் படங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் திரைப்பட ரிலீஸை முறைப்படுத்த இது உதவும் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள். தற்போது சேலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இந்த புதிய நிபந்தனைகள், படிப்படியாக கோவை, திருப்பூர், செங்கல்பட்டு திருவள்ளூர் என தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











