ரெட் கார்டு.. தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுக்கு அதிரடியாக செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்!
சென்னை: நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வா உள்ளிட்ட 14 நடிகர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு குவிந்த நிலையில், அவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப் போவதாக கடந்த வாரம் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், சங்கத்தின் செயல்பாடுகளுக்கு கட்டுப்படாமல் நடந்து வந்த நடிகர் தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வா மீது ரெட் கார்டு விதிக்க தற்போது அதிரடியாக தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷ், சிம்புவுக்கு ரெட் கார்டு: ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் விதிக்கப்பட்ட ரெட் கார்டு காரணமாக நடிகர் சிம்பு பல மாதங்கள் சினிமாவில் நடிக்க முடியாமல் தவியாய் தவித்து வந்தார். ஈஸ்வரன் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்த சிம்பு மாநாடு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தார்.
தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்த சிம்பு அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு ரெட் கார்டு போட்டால் மிகப்பெரிய சிக்கல் உருவாகும் என தெரிகிறது.
மேலும், தமிழ் சினிமாவுக்கு ஏகப்பட்ட தேசிய விருதுகளை அள்ளி கொண்டு வரும் நடிகர் தனுஷ் மீதும் சில தயாரிப்பாளர்கள் அடுக்கிய புகாரின் பேரில் தனுஷுக்கு ரெட் கார்டு போடப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
விஷால், அதர்வாவுக்கும் சிக்கல்: நடிகர் விஷால் நடிப்பில் நாளை மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், லைகா தொடர்ந்த வழக்கு மற்றும் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்தபோது தயாரிப்பாளர் சங்க பணத்தை முறையாக கையாளவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக விஷாலுக்கும் ரெட் கார்டு போடப்போவதாக முடிவு செய்துள்ளனர்.
மேலும், நடிகர் அதர்வாவும் சில தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு சரியாக ஷூட்டிங் செல்லாத நிலையில், அவருக்கும் ரெட் கார்டு தடை விதிக்கப்பட போவதாக முடிவு செய்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்க முடிவு காரணமாக தமிழ் சினிமாவின் இளம் நடிகர்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்க மிகப்பெரிய சிக்கல் உருவாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











