படமே எடுக்காத சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் படுத்தும் பாடு!
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவிலேயே மிகப் பெரிய சக்தியாகத் திகழ்ந்தது.
ஆனால் இன்று, அதை விட கேலிக்குரிய அமைப்பு எதுவும் இல்லை எனும் அளவுக்கு கூத்துகள் அரங்கேறி வருகின்றன.
இரண்டு மூன்று அணிகளாகப் பிரிந்து அவர்கள் செய்யும் அரசியல் ஒரு பக்கம் என்றால், படமெடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களை காலி பண்ணும் வகையில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் இன்னொரு பக்கம்!

இப்போது பொறுப்பில் இருக்கும் (யாருக்கு என்ன பொறுப்பு என்பது கூட பல தயாரிப்பாளர்களுக்கு தெரியாது) பலரும் சினிமா எடுத்தே பல ஆண்டுகள் ஆகின்றன. பொதுச் செயலராக உள்ள ஞானவேல் ராஜா மட்டுமே இன்றைக்கு ஆக்டிவாக சினிமா எடுத்து வருகிறார். மற்றவர்கள் சினிமாவையே கிட்டத்தட்ட மறந்துபோனவர்கள்.
ஆனால் இவர்கள்தான் தயாரிப்பாளர் சங்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நவீன விஞ்ஞான முன்னேற்றங்களை வரவேற்று அதை தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தத் தெரியாத இவர்கள், இன்னும் பழங்கால சிந்தனையிலேயே இருப்பதன் விளைவு, சினிமா வர்த்தகமே அடியோடு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய சினிமா என்பது இணையதளங்களைச் சார்ந்தே இயங்குகிறது. ஆன்லைன் புக்கிங், ஆன்லைன் விளம்பரங்கள், ஆன்லைனிலேயே படம் பார்க்கும் வசதி என இணையதளங்களின் ஆதிக்கம் உள்ள இன்றைய காலகட்டத்தில், இணையதளங்களே வேண்டாம் என ஒதுக்கும் முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்ததில் இருந்தே, அவர்கள் எத்தனை பிற்போக்குத்தனமாக உள்ளனர் என்பது புரிந்திருக்கும்.
ஆக்டிவாக படம் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகத்தில் இடம்பெறாத வரையில் இந்த கேலிக்கூத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


Click it and Unblock the Notifications











