பாகுபலி, கேஜிஎஃப் விட கங்குவா மிரட்டலா இருக்கும்.. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி!
சென்னை: சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் கங்குவா. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் இப்படம் பாகுபலி, கேஜிஎஃப் விட கங்குவா படம் பான் வேர்ல்ட் படமாக இருக்கும், நிச்சயம் ஆயிரம் கோடியை வசூலிக்கும் என தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் கங்குவா: கங்குவா திரைப்படம் ஒரு பாதி இந்த காலகட்டத்தில் நடப்பது போலவும், இன்னொரு பாதி பீரியட் படமாகவும் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் சூர்யாவின் திரைவாழ்வில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் மிக முக்கியமான படமாக உள்ளது.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி: இந்நிலையில், கங்குவா படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஞானவேல் ராஜா கங்குவா படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஏன் என்றால், இந்த படத்திற்கு பெரிய அளவில் கன்டென்ட் இருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்தியில் பாகுபலி, கேஜிஎப் படம் 500 கோடி வசூலித்துள்ள நிலையில், இந்த படம் ஏன் வசூலை பெறாது அதற்கான எல்லா கன்டென்ட்டும் கங்குவா படத்திற்கு இருக்கு. மேலும், நார்த் இந்தியாவில் அனைவருக்கும் தெரிந்த ஒருவராக சூர்யா இருக்கும் போது ஒரு மகத்தான வசூலை ஏன் எதிர்பார்க்கக்கூடாது. இதனால், ஞானவேல் ராஜாவின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. அதற்கு ஏற்றாற் போல பிஸ்னசும் நடந்து கொண்டு இருக்கிறது.
பல மொழிகளில் கங்குவா: படம் வெளியாக ஆறில் இருந்து ஏழு மாதம் இருக்கிறது அதற்குள் அனைத்து விதமான பிஸ்னசும் முடிந்துவிடும். மேலும், நேற்று டீசர் வெளியான நிலையில் பலரும் போன் பண்ணி இந்த மொழியில் வெளியிடலாம் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று டீசர் ஆங்கிலத்தில் வெளியான நிலையில் சரிகமப நிறுவனம் இந்த படத்தை போச்பூரி மொழியில் வெளியிடுங்கள் என்று கேட்டுள்ளது. இதை நான் ஞானவேல் ராஜாவிடம் சொன்ன போது, போச்பூரி மட்டுமில்ல குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா என ஆறுமொழிகளில் டப்பிங் செய்ய சொல்லி இருக்கிறார். இதற்கான டப்பிங் பணிக்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதுதான் படத்தின் கன்டென்ட்டின் வெற்றியாகும்.
பான் வேர்ல்ட்: கிறிஸ்டோபர் நோலன் ஒரு வேர்ல்ட் இயக்குநர், அவர் நாட்டில் நடந்த கதையை அவர் பயோபிக்காக எடுத்து வெற்றி பெற்றார். அவரின் படத்தை இங்கு அனைவரும் பார்க்கும் போது, தமிழ் சினிமாவை ஏன் பான் வேர்ல்ட் படமாக கொண்டு செல்லக்கூடாது. இது வொர்க் கவுட் ஆகாது என்று பலர் கமெண்டில் சொல்லுவார்கள் அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்று நம்பிக்கை தான் வாழ்க்கை, நீங்க இந்த படம் பான் வேர்ல்ட் படமாக இருக்கும் என்பதை நம்ப வேண்டும் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











