ரஜினிகாந்த்தின் கூலிக்கு வந்த சிக்கல்.. வேதனையை வெளிப்படுத்திய தயாரிப்பாளர்.. வைத்து செய்த பிரபலம்
சென்னை: ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக 18 வயதுக்குட்பட்டவர்கள் தியேட்டர்களுக்கு வர வேண்டாம் என்று ஏஜிஎஸ், பிவிஆர் உள்ளிட்ட தியேட்டர்கள் அறிவித்திருக்கின்றன. பல வருடங்கள் கழித்து ரஜினி படத்துக்கு கூலியில்தான் ஏ சான்றிதழ் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கூலி படம்தான் திரைத்துறையில் இப்போதைக்கு ஹெட்லைன்ஸாக இருக்கிறது. ரஜினியுடன் லோகேஷ் முதன்முறையாக இணைந்திருப்பது; இது தவிர்த்து ரஜினியின் படம், இந்தப் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் போன்ற விஷயங்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பை படத்துக்கு ஏற்றி வைத்திருக்கிறது. கண்டிப்பாக இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியை பதிவு செய்யும் என்பதுதான் பலரது நம்பிக்கை.
புக்கிங் எல்லாம் சூப்பர்: படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி ஜோராக நடந்துவருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் டிக்கெட்டுக்கள் ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டன. இதுவரை 50 கோடி ரூபாய்வரைக்கும் புக்கிங் நடந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்பதிவிலேயே இப்படி என்றால் படத்தின் ஓபனிங் நாளில் எந்த மாதிரி இருக்குமோ என சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.

ப்ளாக்கிலும் விற்பனை: அதேசமயம் கூலி படத்தின் டிக்கெட்டுகள் கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களில் ப்ளாக்கிலும் விற்கப்படுகின்றன. அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படும் வீடியோக்கள் எல்லாம் வெளியாகி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. அதுமட்டுமின்றி இதுமாதிரி விற்றால் ஆயிரம் கோடி ரூபாய் என்ன 2,000 கோடி ரூபாய் வசூல் என்றே சொல்லலாம் என ரசிகர்களில் ஒருதரப்பினர் கமெண்ட்ஸும் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
படத்துக்கு ஏ சான்றிதழ்: இது ஒருபக்கம் இருக்க படத்துக்கு சென்சார் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. லோகேஷின் படங்கள் என்றாலே கண்டிப்பாக ரத்தம், வன்முறை இருக்கும். அதேசமயம் ரஜினி நடித்த படம் ஏ சான்றிதழ் வாங்கியிருப்பது பல வருடங்களுக்கு பிறகு நடக்கும் ஒரு விஷயம் ஆகும். 18 வயதுக்குட்பட்டவர்களை அழைத்து வர வேண்டாம் என ஏஜிஎஸ், பிவிஆர் திரையரங்குகள் எல்லாம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுவிட்டன. இதனால் படத்தின் வசூலில் கொஞ்சம் அடி விழுமோ என்ற அச்சமும் எழுந்திருக்கிறது.
தனஞ்ஜெயனும், ப்ளூ சட்டை மாறனும்: இந்நிலையில் தனஞ்ஜெயன் அளித்த பேட்டி ஒன்றில், "கூலி படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இது படத்துக்கு பலவீனம்தான். ரஜினியின் படத்தை சின்ன பிள்ளைகள் ரசித்து பார்ப்பார்கள். அவர்களால் கூலி படத்தை பார்க்க தியேட்டருக்கு வர முடியாது" என்றார். இதனை குறிப்பிட்டு பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த தடையை பெரும்பாலானசிங்கிள் ஸ்க்ரீன் மற்றும் மல்டிப்ளக்ஸ் அல்லாத தியேட்டர்கள் பின்பற்றுவதில்லை என்பதே வரலாறு. 1,000 கோடி வடைடை சுட.. ப்ளாக் டிக்கட் விற்பனை, 18 வயதிற்கு கீழ் உள்ளோரை அனுமதிப்பது என விதிமீறல்கள் தொடர்வதுதான் வாடிக்கை" என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











