தீபாவளிக்கு ஒரு பெரிய பட்ஜெட் படம்தான் வரும்.. என்ன படம் தெரியுமா.. பிரபல தயாரிப்பாளர் உறுதி!
சென்னை: ஆண்டுதோறும் தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு தனி மவுசு காணப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு எந்தெந்த படங்கள் ரிலீசாகும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு சூர்யாவின் கங்குவா, அஜித்தின் விடாமுயற்சி மற்றும் வெற்றிமாறனின் விடுதலை 2 ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தீபாவளி ரேஸில் கவினின் கிஸ் படமும் இணையவுள்ளதாக கூறப்படும் சூழலில் இந்த தீபாவளிக்கு பெரிய பட்ஜெட் படம் ஒன்றுதான் வெளியாகும் என்று பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது பேட்டியில் உறுதியாக தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் தனது இன்டர்வியூவில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தீபாவளி ரிலீஸ் படங்கள்: கோலிவுட்டில் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்து வருகிறது. இந்த ஐந்து மாத காலங்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. சிறிய பட்ஜெட்டிலிருந்து முன்னணி நடிகர்களின் படங்கள் வரை இந்த லிஸ்ட்டில் உள்ளன. இவற்றில் சில படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளன. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படமும் நூறு கோடி கிளப்பில் இணைந்துள்ளது. சமீப காலங்களாக மக்கள் மறந்திருந்த ஹாரர் ட்ரெண்டை இந்த படம் மீண்டும் கொண்டு வந்துள்ளது.
தீபாவளி ரேஸ்: இதையடுத்து அடுத்தடுத்த பேய் படங்கள் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே வரும் தீபாவளிக்கு எந்தெந்த படங்கள் ரிலீசாகும் என்று ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு முன்னதாகவே விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாக உள்ள சூழலில் தீபாவளி ரேசில் இந்த படம் கலந்து கொள்ளவில்லை. இதனிடையே தீபாவளிக்கு சூர்யாவின் கங்குவா, அஜித்தின் விடாமுயற்சி, வெற்றிமாறனின் விடுதலை 2 படங்கள் ரிலீசாகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தனஞ்செயன் உறுதி: ஆனால் தயாரிப்பாளர் தனஞ்செயன் இந்த தகவலை மறுத்துள்ளார். தீபாவளி அதிகமான விடுமுறையை கொண்ட பண்டிகை இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ள அவர், தீபாவளிக்கு அதிகபட்சமாக மூன்று நாட்கள் லீவு மட்டுமே கிடைக்கும் என்றும் இந்த விடுமுறையை மனதில் வைத்து இரண்டு மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகாது என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இப்படி வெளியிடுவது இரண்டு படங்களின் வசூலையும் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தீபாவளிக்கு கங்குவா படம் வெளியாவது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு ரெடியாகும் கங்குவா: இதற்கான அடுத்தடுத்த போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை படக்குழுவினர் விறுவிறுப்பாக நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடுவது போல அஜித்தின் விடாமுயற்சி மற்றும் வெற்றிமாறனின் விடுதலை 2 படங்கள் வெளியாவது சந்தேகமே என்று கூறியுள்ள அவர், வேண்டுமானால் கங்குவா படத்துடன் சில சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளார். தீபாவளி ரேசில் கவினின் கிஸ் படமும் இணைய உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான சூழலில் இந்தப் படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ரசிகர்கள் காத்திருப்பு: எப்போதுமே தீபாவளிக்கு புத்தாடைகளை அணிந்து கொண்டு பலகாரங்களை சாப்பிட்டு விட்டு திரையரங்கில் சென்று புதுப்படங்களை பார்ப்பதை ரசிகர்கள் ஆர்வமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள சூர்யாவின் கங்குவா படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளையும் உற்சாகத்தையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளதாகவும் ஓடிடியில் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் முன்னதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











