இயக்குனரை திட்ட உனக்கென்ன உரிமை இருக்கு... ப்ளூ சட்டை மாறனை விளாசிய தனஞ்செயன்!
சென்னை: நடிகர் சூர்யாவின் இரண்டு ஆண்டு கடுமையான உழைப்பில் உருவான கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் வெளியானது. ஆனால், படத்திற்கு வந்த மோசமான விமர்சனத்தால், படம் பெரும் தோல்வித்திரைப்படமாக அமைந்தது. இதனால், அதிருப்தி அடைந்த, தனஞ்செயன், சிலர் வேண்டுமென்றே வெறுப்புகளை கங்குவா திரைப்படத்தின் மீது பரப்பி நல்ல திரைப்படத்தை வெற்றியடையாமல் அவர்கள் செய்திருப்பதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தனஞ்செயன், ஒரு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைவது பொதுமக்களின் விமர்சனமும் அதே போன்று பத்திரிக்கையாளர்களின் விமர்சனம் தான். ஆனால் ஒரு சிலர் அந்த படத்தை மோசமாக விமர்சனம் செய்கிறார்கள். அதையே சில youtube சேனல்களில் தம்ப்லைனில் வைத்து அந்த படத்தை மேலும் ஓட விடாமல் செய்து விடுகிறார். இதுபோன்று அவர்கள் செய்வதால் ஒரு படத்திற்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச வாய்ப்பு கூட கிடைக்காமல் போய்விடுகிறது.

விஷத்தை கலக்குகிறார்கள்: பணம் கொடுத்து படம் பார்ப்பவர்களுக்கு அந்த படம் குறித்து கருத்து சொல்ல முழு சுதந்திரமும் உண்டு. ஆனால் அந்த இயக்குனர் கையில் கிடைத்தால் அடிப்பேன், உதைப்பேன், கொல்லுவேன், வாடா போடா என்று சொல்வதற்கு யார் உரிமை கொடுத்தார்கள். மக்கள் கொடுக்கும் விமர்சனத்தால் தான், பல திரைப்படங்கள் ஓடி இருக்கின்றன. அதில், எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் இரண்டு சதவீதம் மக்கள், அதில் விஷத்தை கலக்குகிறார்கள். மேலும், விமர்சனம் சொல்கிறேன் என்ற பெயரில் முதல் நாளே படத்தை கழுவி ஊற்றுவதால், இவர்களின் விமர்சனத்தை பார்த்துவிட்டு, இவரே இப்படி சொல்லிவிட்டார் என்று யாரும் படம் பார்க்க வருவது இல்லை. இதனால் சினிமா துறையே சீர்குலைந்து வருகிறது.
ஓடுவதில்லை: வாழை மற்றும் லப்பர் பந்து திரைப்படத்திற்கு பெரிதாக ப்ரமோஷன் எதுவும் செய்யவில்லை, அதேபோல குறைந்த அளவு தியேட்டரில் தான் அந்த படம் ரிலீஸ் ஆனது. ஆனால் அந்த படம் குறித்து மக்கள் கொடுத்த விமர்சனம் தான் அந்த படத்தை ஓட வைத்தது. இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் ஓட வேண்டும் என்றால் அந்த படத்திற்கு நல்ல விமர்சனம் இருந்தால் மட்டும்தான் அந்த படம் ஓடுகிறது. சிலர் மோசமான விமர்சனங்களை வைப்பதால் அந்த படங்கள் ஓடுவதில்லை.
கவனமாக இருக்க வேண்டும்: கொரோனாவுக்கு முன்பு வரை மக்களின் சினிமா அறிவு என்பது வேறு விதமாக இருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு மக்கள் அனைத்து விதமான மொழி திரைப்படங்களையும் பார்க்கப் பழகி விட்டார்கள். இதனால், சினிமா பிரியர்களின் அறிவு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. தற்போது, ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவது என்றாலும் மிகவும் கவனமாக வெளியிட வேண்டும், ஹாலிவுட் படத்தின் ஏதாவது ஒரு போஸ்டர் போல அது இருந்தால் உடனே ரசிகர்கள் ட்ரோல் செய்து விடுவார்கள். அதுமட்டுமில்லாமல், பலர் என்னுடைய கதை நல்ல கதை என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.அவர்களின் பார்வையில் அது நல்ல கதையாக இருக்கலாம். ஆனால், அந்த கதையில் விஷயம் மிஸ்ஸாகி இருக்கும் என்று தயாரிப்பாளர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











