மேடையில் கண்டதை பேசக்கூடாது.. வாயை மூடிட்டு இருங்க மிஷ்கின்.. கொந்தளித்த தயாரிப்பாளர்!
சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பாட்டல் ராதா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசியது இணையத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், நாகரீகமாக பேசத்தெரியவில்லை என்றால், வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருங்கள் என்று மிஷ்கினின் பேச்சை கண்டித்தார்.
அதில் பேசிய மிஷ்கின் நான் ஒரு குடிகாரன், மற்றவர்களை விட நான் அதிகம் குடிப்பேன், குடிப்பழக்கம் இல்லாத சமூகமே இல்லை. உலகம் முழுவதும் எங்கு போனாலும் மது இருக்கிறது. பல்வேறு நாடுகளில் பல வருடங்கள் பழமையான ஒயினை விலை மதிப்பில்லாததாக பார்க்கிறார்கள். அதனால் மதுவைப் பற்றி எனக்கு முழு விவரமும் தெரியும் என்று குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் அளவில் பேசி இருந்தால் அது மட்டும் இல்லாமல், நாகரீக மற்ற வார்த்தைகளையும் பேசிக்கிட்டு இருந்தார். இது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் மிஷ்னின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தனஞ்ஜெயன் பேச்சு: அந்த வகையில் 2k love story படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், அண்மையில் ஒரு விழாவில் மிஷ்கின் பேசியதை கேட்டு நொந்து போனேன். மேடையில் பேசும்போது அநாகரிகமான வார்த்தைகளோ, மற்றவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளோ, உடல் உறுப்பு சம்பந்தமான வார்த்தைகளையோ பேசக்கூடாது. அதேபோல அடுத்தவர்களை வாடா, போடா என்று ஒருமையில் பேசுவதற்கு யாருக்கும் உரிமையே இல்லை.
வாயை மூடிட்டு இருங்க: இயக்குனர் மிஷ்கின் எனக்கு மிக சிறந்த நண்பர், அவருடைய அலுவலகத்துக்கு சென்று நான் பல மணி நேரம் அவரிடம் பேசி இருக்கிறேன். அவர் இப்படி பேசும்போது அவருக்கு தனிப்பட்ட முறையில் இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறேன். நாம் பேசும் வார்த்தைகள் மற்றவர்களை காயப்படுத்தாத வகையிலும், அன்பாகவும் இருக்க வேண்டும், மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளை நாம் பேசக்கூடாது. அப்படி பேச தெரியவில்லை என்றால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். பல இன்டர்வியூகளில் என்னை ஏதாவது நெகட்டிவாக பேச வேண்டும் என்று பல கேள்விகள் கேட்பார்கள். ஆனால், நான் எப்போதும் பாசிட்டிவாக தான் பேசுவேன் பாசிட்டிவாக பேசுவது என்பது மிகவும் கஷ்டமான விஷயம்.
யார் செய்தாலும் தப்புதான்: ஒரு மேடை கிடைத்தது என்பதற்காக மற்றவர்களை சகட்டுமேனிக்கு பேசுவது எந்த வகையிலும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அது யார் பேசியிருந்தாலும் அதை நான் தவறு என்று தான் சொல்லுவேன். மிஷ்கின், மேடையில் ஆண் உறுப்பு, பெண் உறுப்பு பற்றி பேசியதை கேட்டு அதிர்ந்து போனேன். அவர் மேடையில் அப்படி பேசும் போது, அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால், அத்தனை பேரும் அவருடைய பேச்சை தடுக்காமல், அவர் பேசியதை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அன்று மிஷ்கின் அரைமணி நேரம் பேசி இருந்தார். அதில் 25 நிமிடம் சிறப்பான கருத்துக்கள் இருந்தன. ஆனால், 4நிமிட பேச்சால் அனைத்துமே வீணாகிவிட்டது. இயக்குநர் மிஷ்கின் என் நண்பர் என்பதால் அவருக்கு ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன் மேடையில் இதுபோல அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











