சூர்யாவுடன் கருத்து வேறுபாடு.. முகமூடி தோல்வி.. மிஷ்கின்தான் காரணம்.. ஓபனாக பேசிய தயாரிப்பாளர்
சென்னை: இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை. அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் மிஷ்கின் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஓபனாக பேசியிருக்கிறார்.
வின்செண்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக இருந்த மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் இயக்குநராக அறிமுகமானார். நரேன், பாவனா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் ஆஹா ஓஹோ அளவுக்கு ஹிட் இல்லை என்றாலும் மிஷ்கினுக்கும் அவரது திரை மொழிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்கு பிறகு மிஷ்கின் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் என்ற வரிசையில் இணைந்தார்.

முகமூடி மிஷ்கின்: மிஷ்கின் மிகவும் எதிர்பார்த்து செய்த படம் முகமூடி. எதார்த்த வாழ்க்கையிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோ என்ற ஒன்லைனை அடிப்படையாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. ஜீவா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிஷ்கின் பேசிய பேச்சுக்கும், படத்துக்கும் துளிகூட சம்பந்தமே இல்லை என்றும் ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர்.

தனஞ்ஜெயன் பேட்டி: இந்நிலையில் முகமூடி திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், "முகமூடி படத்துக்கு முன்பு மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் அவர் நாம் எடுப்பதுதான் படம் என்கிற அளவுக்கு ஓவர் கான்ஃபிடன்ஸில் இருந்தார். முதலில் சூர்யாதான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால் சில கருத்து வேறுபாடு எழுந்ததால் அந்தப் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார். பிறகுதான் ஜீவா ஒப்பந்தம் ஆனார்.

படமே பிடிக்கவில்லை: முகமூடி படத்துக்கான க்ளைமேக்ஸை எடுத்துக்கொண்டிருந்தபோது ஜீவா எனக்கு ஃபோன் செய்தார். அப்போது அவர், 'எனக்கு இந்தப் படமே பிடிக்கவில்லை சார். இந்த க்ளைமேக்ஸ் கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகாது' என்று கூறினார். உடனே நான், 'மிஷ்கினிடம் நாம் வைத்திருக்கும் எதிர்பார்ப்புக்கு இப்படியான ஒரு க்ளைமேஸ் வைத்தால் கண்டிப்பாக மாட்டிக்கொள்வோம். ரசிகர்களுக்கு பிடிக்கும்படியாக பிரமாண்டமாக க்ளைமேக்ஸ் காட்சியை வைக்கலாம்' என்று சொன்னேன்.
18 கோடி ரூபாய் முதலீடு: மிஷ்கினோ என்னிடம், நான் படம் எடுத்துவிட்டேன். இதுதான் படம். நான் எடுத்திருக்கிறேன். நீங்கள் ரிலீஸ் பண்ணுங்கள் என்று நம்பிக்கையோடு சொன்னார். நான் இந்தப் படத்துக்காக 18 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தேன். ஜீவாவின் கரியரில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட் படம். எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்" என்றார். மிஷ்கின் இப்போது ட்ரெய்ன் என்ற படத்தை இயக்கிவருகிறார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











