அஜித்தின் குட் பேட் அக்லியும் விஜய்யின் GOAT படமும் ஒரே மாதிரிதான்.. சீக்ரெட் சொன்ன பிரபல தயாரிப்பாளர்
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. படத்திலிருந்து இதுவரை வெளியாகியிருக்கும் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த மாத இறுதியில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித். இந்தப் படத்துக்கு முன்னதாக அவர் நடித்த விடாமுயற்சி திரைப்படம் சரியாக போகவில்லை. இதன் காரணமாக இப்படத்தை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். முக்கியமாக அஜித்தின் தீவிர ரசிகர் ஆதிக் என்பதால் கண்டிப்பாக இதனை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத படமாகத்தான் கொடுப்பார்; எக்கச்சக்க மாஸ் சீன்கள் இடம்பெறும் என்று உறுதியோடு கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

டீசர் மற்றும் முதல் சிங்கிள்: படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களை வைத்திருந்தார் ஆதிக். அதாவது வாலி, வேதாளம், ரெட், பில்லா, மங்காத்தா என அஜித் நடித்த பழைய படங்களின் ரெஃபரன்ஸ்களை வைத்திருந்தது ஏகே ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு படத்திலிருந்து முதல் சிங்கிள் ஓஜி சம்பவம் வெளியானது. அதுவும் அவர்களை திருப்திப்படுத்தவே செய்கிறது. அப்பாடலை ஜிவி பிரகாஷ், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பாடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 10ல் ரிலீஸ்: படமானது ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸாகவிருக்கும் படத்துக்கு கண்டிப்பாக காலை 9 மணி சிறப்பு காட்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் டிக்கெட் புக்கிங்கும் அநேகமாக ஏப்ரல் முதல் வாரத்திலேயே தொடங்கிவிடும் என்றும் கருதப்படுகிறது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனியார் யூடியூப் சேனலுக்கு இந்தப் படம் குறித்து பேட்டியளித்திருக்கிறார்.
தனஞ்ஜெயன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ்நாட்டில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. பல திரையரங்க உரிமையாளர்கள் குட் பேட் அக்லியை தங்களது தியேட்டர்களில் திரையிட முடிவு செய்துவிட்டார்கள். படத்துக்கு பெரிய அட்வான்டேஜ் ஒன்று இருக்கிறது. அதாவது பத்தாம் தேதியிலிருந்து அடுத்த ஐந்து நாட்கள் வரிசையாக விடுமுறை நாட்கள். எனவே படத்தின் வசூலில் எந்தவிதமான குறையும் இருக்காது என்பதுதான் உண்மை. இதுவும் தியேட்டர்காரர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

குட் பேட் அக்லியும் GOATம் ஒன்று: இந்தப் படத்துக்கான அட்வான்ஸ் தொகை விஷயங்களும், பிற விஷயங்களும் விஜய்யின் GOAT படத்துக்கு நடந்ததுபோலவே ஒன்றாகத்தான் நடக்கும். திரையரங்க உரிமையாளர்களும் அதற்கு ஓகே சொல்லிவிட்டார்கள். அஜித்தின் படங்களிலேயே இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கண்டிப்பாக பெரிய அளவில் படம் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்தப் படத்துக்கு போட்டியாகவும் எந்தப் படமும் வெளியாகவில்லை. அநேகமாக 9 மணி காட்சி இருக்கும் என்றே எதிர்பார்க்கிறோம். கண்டிப்பாக அரசு அனுமதி கொடுக்கும் என்றும் நம்பிக்கை இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











