Gnanavel Raja: கோலிவுட் டைரக்டர்ஸ் அட்லிக்கு பார்ட்டி வச்சு கொண்டாடனும்.. ஞானவேல் ராஜா பளீச்!
சென்னை: இயக்குநர் அட்லியின் திரையுலக பயணம் ராஜா ராணி படம் மூலம் துவங்கி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதித்த அட்லி, ஜவான் படத்தில் ஷாருக்கானை இயக்கி வெற்றிப்படமாக 1000 கோடி கிளப்பில் இடம்பெற செய்துள்ளார். இதன்மூலம் தமிழ் சினிமா இயக்குநர்கள் மீது மிகப்பெரிய கவனம் விழுந்துள்ளது.
சமீபத்தில் பேட்டியொன்றில் பேசியிருந்த பாலிவுட் நடிகர் சல்மான்கானும், தான் ஹாலிவுட்டில் நடிக்க விரும்பவில்லை என்றும் தென்னிந்திய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றவே தான் விரும்புவதாகவும் கூறியிருந்தார். இதற்கேற்ப தற்போது ஏஆர் முருகதாசுடன் சிக்கந்தர் படத்தில் நடித்துவரும் சல்மான்கான், அடுத்ததாக அட்லி இயக்கத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் அட்லி: இயக்குநர் அட்லி ராஜா ராணி படம் மூலம் கோலிவுட்டில் தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர். பல படங்களின் சாயல் இந்தப் படத்தில் இருப்பதாக விமர்சன்ஙகள் எழுந்தபோதிலும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த படங்களில் இணைந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார் அட்லி. விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்தது. அட்லி -ஷாருக்கான் காம்பினேஷனில் கடந்த ஆண்டில் வெளியான ஜவான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து அட்லிக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது.
சல்மான் -அட்லி கூட்டணி: ஜவான் படத்தில் ஷாருக்கானை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து வெற்றிப்பெற செய்த அட்லி, படத்தில் நயன்தாரா, அனிருத், பிரியாமணி உள்ளிட்டவர்களையும் சிறப்பாக வெளிப்படுத்தினார். இதையடுத்து பான் இந்தியா இயக்குநராக கவனம் பெற்றுள்ள அட்லி, அடுத்ததாக டோலிவுட்டில் அல்லு அர்ஜுனை இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தன்னுடைய அடுத்தப்படத்திற்காக சல்மான்கானுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட இரு நாயகிகள் கமிட்டாகியுள்ளனர். விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.
அட்லியை கொண்டாடத்தவறிய இயக்குநர்கள்: இந்நிலையில் பாலிவுட்டில் நமது இயக்குநர்களுக்கு மிகப்பெரிய வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ள அட்லியை நமது இயக்குநர்கள் பார்ட்டி வைத்து கொண்டாட வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கேட்டுக் கொண்டுள்ளார். தங்கலான், கங்குவா படங்கள் அவரது தயாரிப்பில் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகிவரும் சூழலில், அவர் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் பிரபல இயக்குநர் ராஜமௌலி, அனைத்து இயக்குநர்களுடனும் சிறப்பாக பயணித்து வருவதாகவும் சந்திப் ரெட்டி வங்காவுடன் அனிமல் படத்திலும் ரங்கஸ்தலம் உள்ளிட்ட படங்களிலும் அவர் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
பார்ட்டி வைக்க வேண்டும்: இதேபோன்ற ஒரு ஒற்றுமை நமது கோலிவுட் இயக்குநர்களிடமும வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தான் மற்ற இயக்குநர்களிடம் பேசும்போது பாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள அட்லியை மற்ற இயக்குநர்கள் அழைத்து பார்ட்டி வைக்க வேண்டும என்று கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் அவரது வெற்றியை பாராட்டி, அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றும் தான் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார். மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்கள் செய்த சாதனைகள் தற்போது மீண்டும் திரும்பியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











