தெலுங்கு நடிகர்களை பார்த்து மாறுங்க... தமிழ் நடிகர்களுக்கு கே.ராஜன் அறிவுரை!
சென்னை : சிட்தி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜா, தெலுங்கு நடிகர்களை பார்த்து கொஞ்சமாவது தமிழ் நடிகர்கள் மாற வேண்டும் என்றார்.
Recommended Video
சூர்யா பிலிம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக மகேஷ்வரன் நந்தகோபால் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாரித்துள்ள படம் சிட்தி.
இந்தப் படத்தில் அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.

சிட்தி
ஆக்ஷன்,த்ரில்லர்,க்ரைம் திரைப்படமாக அமைந்துள்ள இத்திரைப்படத்தை பயஸ் ராஜ் எழுதி இயக்கி உள்ளார். மேலும், ஐ.எம்.விஜயன், ராஜேஷ் சர்மா, ஹரி கிருஷ்ணன், சிஜீ லால், வேணு மரியாபுரம், சொப்னா பிள்ளை, மதுவிருத்தி, திவ்யா கோபிநாத், தனுஜா கார்த்தி ஆகியோர் நடித்துள்ளார்கள். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரமேஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா
சிட்தி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில்,பேசிய தயாரிப்பாளர் கே. ராஜா, சூர்யா பிலிம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் என்றவுடன் எனக்கு ஏ எம் ரத்னம் அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார். ஷங்கரை வைத்து, படமெடுத்து சம்பாதித்து அதே பணத்தை இங்கே படத்திலேயே விட்டுவிட்டு அதை அடைக்க தெலுங்கில் போய் படமெடுத்து கொண்டிருக்கிறார். சூர்யா பிலிம் புரொடக்ஷன்ஸுக்கு நல்ல பெயர் நன்றாக வரும்.

தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள்
இந்த கடின காலத்திலும் தமிழில் படத்தை கொண்டு வரும் தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி. மலையாள சினிமாவில் சினிமாவுக்கு உண்மையாக இருப்பார்கள். இப்போது நான் அனைத்து மலையாளப் படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரை சிரமப்படுத்துகிறார்கள் அவர்களை காப்பாற்றுங்கள் என்று தான் கேட்கிறேன். கேரளாவில் எல்லா நடிகர்களும் உதவி செய்கிறார்கள். இங்கே யார் உதவி செய்கிறார்கள்.

தோல்வியிலும் பங்கு கொள்ளுங்கள்
கொரோனா காலத்தில் ரஜினி சார் போன் செய்து என்ன உதவி வேண்டும் எனக்கேட்டு 100 மூட்டை அரிசி கொடுத்தார். ராம் சரண் படம் தோற்ற போது நான் ஹீரோ என்பதால் தான் படம் வாங்கினார்கள் என தயாரிப்பாளருக்கு 15 கோடியை திருப்பி கொடுத்தார். ராதே ஷ்யாம் படம் தோற்றதும் பிரபாஸ் அந்த படத்திற்கு வாங்கிய பணத்தில் 50 கோடியை திருப்பி கொடுத்துவிட்டார். ராம் சரண், பிரபாஸை வணங்குகிறேன்.

என் வேண்டுகோள்
இதுபோன்ற செய்திகளை நான் தமிழ்நாட்டிலும் கேட்க வேண்டும். வெற்றியில் பங்கு கொள்ளும் ஹீரோக்கள் தோல்வியிலும் பங்குகொள்ள வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். இப்படி நீங்கள் செய்தால் நீங்கள் தெய்வங்கள் என்றார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என தயாரிப்பாளர் கே ராஜா பேசி முடித்தார்.


Click it and Unblock the Notifications











