சம்பளத்துக்கு பதில் போதை பொருள் வாங்குவீங்களா?.. ஸ்ரீகாந்த்தை விமர்சித்த தயாரிப்பாளர்
சென்னை: ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்திய வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களது இந்த கைது நடவடிக்கை திரைத்துறைக்கு பெரிய ஷாக்கை கொடுத்திருக்கிறது. மேலும் பல நடிகர்கள் இதில் சிக்கவிருக்கிறார்கள் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் இந்த விவகாரம் குறித்து ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் ஸ்ரீகாந்த்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார் அவர்.
ரோஜாக்கூட்டம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஸ்ரீகாந்த்துக்கு சினிமா பின்புலம் உள்ள குடும்பம் கிடையாது. தனது திறமை, அழகு ஆகியவைகளை வைத்துக்கொண்டு குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக வலம் வர ஆரம்பித்தார். தொடர்ந்து சில ஹிட் படங்களில் நடித்த அவருக்கு; பெர்சனல் வாழ்க்கையில் மனைவி வந்தனா தொடர்பாக ஒரு பிரச்னை வந்தது. அந்தப் பிரச்னையிலிருந்து அவருக்கு ஒட்டுமொத்தமாக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
போதை பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த்: பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்துவந்த அவர்; தடை செய்யப்பட்ட கொக்கைன் போதை பொருளை பயன்படுத்தியது காவல் துறையினருக்கு தெரியவந்தது. உடனடியாக ஸ்ரீகாந்த் கைதும் செய்யப்பட்டார். முதலில் தான் கொக்கைன் பயன்படுத்தவில்லை என்று சாதிக்க முயன்றவருக்கு; மருத்துவ பரிசோதனை ரிசல்ட் அவருக்கு எதிராக வந்தது. அதனையடுத்து ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட அவர் இப்போது புழல் சிறையில் இருக்கிறார்.

கிருஷ்ணாவும் கைது: ஸ்ரீகாந்த் சிக்கிய வழக்கிலேயே பிரபல இயக்குநரின் சகோதரர் மற்றும் நடிகரான கிருஷ்ணாவும் சம்பந்தப்பட்டிருந்தார். அவரது பெயர் வெளியே கசிய ஆரம்பித்ததும் அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் அவரோ தனது வழக்கறிஞரோடு ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது, 'தனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே போதை பொருள் பயன்படுத்த வாய்ப்பில்லை' என்று தெரிவித்தார்.
எப்படி சிக்கினார்?: பிறகு அவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதிலும் அவர் போதை பொருள் பயன்படுத்தவில்லை என்று ரிசல்ட் வந்தது. இருந்தாலும் விடாத போலீஸ், கிருஷ்ணாவின் வாட்ஸ் அப் உரையாடல்களை ஆராய்ந்தார்கள். அந்த ஆய்வின் முடிவில் கிருஷ்ணா போதை பொருள் வாங்கியிருப்பதும், பயன்படுத்தியதும் உறுதியானதால் அவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டார்கள்.
ராஜன் பேட்டி: இவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டது கோலிவுட்டில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்னும் பல முக்கியமான நடிகர்கள் இதில் சிக்குவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் இந்த விவகாரம் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "நடிகர்கள் படங்களை ஹிட்டாக கொடுக்கும்போது ஜாலியாக பார்ட்டி செய்ய ஆரம்பிப்பார்கள்.
யாராவது வாங்குவார்களா?: அதேசமயம் படங்கள் தோல்வியடையும்போது விரக்தியில் குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒருசில நடிகர்கள் கேரவனிலேயே குடித்துவிட்டு நடிக்க வருவார்கள். ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் இந்த விஷயத்தில் சிக்கிவிட்டார்கள். ஒருவர் உங்களுக்கு சம்பளம் தராமல் அதற்கு பதிலாக போதை பொருளை கொடுத்தால் வாங்கலாமா?. தூக்கிப்போட்டுவிட்டு காவல் துறையிடம் சென்றிருக்க வேண்டியதுதானே. பிரசாத்தான் ஒரு முட்டாள்; ஸ்ரீகாந்த்துக்கு எங்கே போனது. சம்பளத்துக்கு பதிலாக போதை பொருளை கொடுத்தார் என்று அவர் சொல்வதெல்லாம் கதைதான்" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











