Producer K Rajan: விஜய்யோட அரசியல் அடித்தளம் சிறப்பு.. கே ராஜன் பகிர்ந்த விஷயம்!
சென்னை: நடிகர் விஜய் 40 ஆண்டுகளை கடந்து சினிமாவில் நடித்து வருபவர். சிறுவனாகவே தன்னுடைய அப்பாவும் இயக்குநருமான எஸ்ஏசியின் இயக்கத்தில் நடிக்கத் துவங்கி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தளபதியாக நடைபோட்டு வருகிறார் விஜய். விஜய்யின் நீண்டநாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. ஆம். அரசியல் கட்சியை விஜய் துவங்கவுள்ளதாக கூறப்பட்டு வந்ததை தற்போது நனவாக்கியுள்ளார்.
தளபதி 69 படத்துடன் படங்களில் இருந்து விலகி, தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார் விஜய். அவரது இந்த முடிவு ஏமாற்றம் அளித்தாலும் மாநிலத்திற்கு நல்லது நடந்தால் சரி என்ற எண்ணத்தில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவரது அரசியல் அடித்தளம் குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் தற்போது பேசியுள்ளார்.

விஜய்யின் அரசியல் பிரவேசம்: நீண்ட காலங்களாகவே நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. அவரது அப்பா எஸ்ஏசியும் இந்த விஷயத்தில் சில நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையும் பார்க்க முடிந்தது, இதனால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற தன்னுடைய கட்சியை அறிவித்துள்ளார் விஜய். நீண்ட காலங்களாக இதை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அடுத்தடுத்த நலத்திட்டங்களால் அனைவரையும் கவர்ந்துவந்த விஜய்யின் கட்சி அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இறுதிப்படம் தளபதி 69: இந்நிலையில் அரசியல் கட்சியை அறிவித்ததுடன் மட்டுமில்லாமல் தான் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் அறிவித்து அதிர்ச்சியை கிளப்பினார் விஜய். எம்ஜிஆர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பையும் அரசியலையும் சமமான அளவில் மேற்கொண்டுவந்த நிலையில், விஜய் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனாலும் அவர் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளது ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கே ராஜன் பாராட்டு: ஆனாலும் விஜய்யின் அரசியல் பிரவேசம் சிறப்பானதாகவே பார்க்கப்படுகிறது. அவரது கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளவும் அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் அரசியல் அடித்தளம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக தயாரிப்பாளர் கே ராஜன் தெரிவித்துள்ளார். விஜய் தொடர்ந்து பேசி வருவதும் அவரது விருதுகள் வழங்குவது உள்ளிட்ட பல விஷயங்களும் மிகச் சிறப்பாக அமைந்து வருவதாகவும் இதற்கென விஜய் ஆலோசனை குழு ஒன்றை தனியாக வைத்து செயல்பட்டு வருவதாகவும் கே ராஜன் மேலும் கூறியுள்ளார்.

களத்தில் மக்களை சந்திக்க வேண்டும்: ஆனால் மாணவர்களுக்கு விருது வழங்குவது மட்டுமே மக்களை கவர்ந்து விடாது என்றும் அடித்தட்டு மக்களுக்கு விஜய் என்ன மாதிரியான நலத்திட்டங்களை கொடுப்பார் என்பது குறித்த கேள்வி கண்டிப்பாக மக்களிடம் எழும் என்றும் கே ராஜன் தெரிவித்துள்ளார். மக்களை தொடர்ந்து களத்தில் சென்று சந்திக்க வேண்டும் என்றும் மத்திய அரசோ மாநில அரசோ நல்லது செய்தால் பாராட்டவும் தவறு செய்தால் சுட்டிக்காட்டவும் தயங்கக்கூடாது என்றும் கே ராஜன் மேலும் விஜய் குறித்து பேசியுள்ளார். முன்னதாக அரசியலுக்கு வந்துள்ள மற்ற நடிகர்களை காட்டிலும் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். ஆட்சியை பிடிப்பாரா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் கே ராஜன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











