சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் கே.பி.பிலிம்ஸ் பாலு திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல தயாரிப்பாளர் கே.பி.பிலிம்ஸ் பாலு இன்று அதிகாலை மரணமடைந்தார்.
Recommended Video

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.பி.பிலிம்ஸ் உரிமையாளர் கே.பாலு. இந்த நிறுவனம் மூலம் தமிழில் பல படங்களைத் தயாரித்துள்ளார்.
பி.வாசு இயக்கத்தில், பிரபு, குஷ்பு நடித்து சூப்பர் ஹிட்டான சின்னத்தம்பி படத்தின் தயாரிப்பாளர் இவர்தான்.

ஜானகிராமன்
சீமான் இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி, சரத்குமாரின் ஜானகிராமன், பாண்டித்துரை, உள்ளத்தில் நல்ல உள்ளம், ஆகா என்னப் பொருத்தம் உட்பட சுமார் 25-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதற்காக அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் அவர் உடல்நிலை மோசமானது.

தனியார் மருத்துவமனை
இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்குத் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து இன்று அதிகாலை மரணமடைந்தார்.

வெற்றி பெற்றார்
அவர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட இவர், அதில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சரத்குமார் இரங்கல்
நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கலில், கே.பி.பிலிம்ஸ் பாலுவின் மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் தந்திருக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம்
மறைந்த தயாரிப்பாளர் கே.பாலுவின் இறுதிச்சடங்கு இன்று 11.30 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடக்கிறது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'தயாரிப்பாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், ராம்கி, அர்ஜுன் உட்பட 25 வெற்றிப் படங்களுக்கு மேல் தயாரித்தவரும் தொடர்ந்து செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் கே.பி. பிலிம்ஸ் கே.பாலு. அன்னாரின் மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications











