கருடன் மாஸ் ஹிட்.. சூரிக்கு விலை உயர்ந்த பரிசு கொடுத்த தயாரிப்பாளர்.. கிஃப்ட் என்ன தெரியுமா?
சென்னை: விடுதலை படத்திற்கு பின் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரியின் நடிப்பில் கடந்த மாதம் 31ந் தேதி வெளியானத் திரைப்படம் கருடன். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற காரணமாக இருந்த சூரிக்கு தயாரிப்பாளர் விலை உயர்ந்த பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
நடிகர் சூரி முக்கிய ரோலில் நடித்த இப்படத்தில், சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கருடன் கதை: தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி. அந்த கோவிலின் பட்டா, கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது. அதனை வடிவுக்கரசியின் குடும்பம் பராமரித்து வருகிறது. அந்தக் குடும்பத்தை சேர்ந்த சசிகுமார், உன்னி முகுந்தன் இணை பிரியாத நண்பர்களாக உள்ளனர். இதில், சிறுவயது முதல் சோறு போட்டு வளர்த்த ஆதிக்கு தீவிர விசுவாசியாக இருக்கிறார் சூரி.
இயக்குநருக்கு பாராட்டு: இந்த நேரத்தில் உன்னி முகுந்தனுக்கு ஒரு பணப்பிரச்சனை ஏற்பட அவர் ஒரு பெரிய தவறை செய்துவிடுகிறார். அந்த தவறை வைத்து சசிகுமார், உன்னி முகுந்தன் இவர்களின் நட்பில் விரிசல் ஏற்படுத்தி, அந்த கோவில் நிலத்தை அடைய திட்டம் போடுகிறார் அமைச்சர். இவர்களைத் தாண்டி கோவிலின் நிலத்தின் பட்டாவை அமைச்சருக்கு கிடைத்ததா.. இல்லையா? இந்த நேரத்தில் சூரி யார் பக்கம் இருந்தார் என்பது தான் கருடன் படத்தின் கதை. இந்த படத்தில் சூரி, தன்னை மெறுகேற்றிக்கொண்டு அட்டகாசமாக நடித்து இருக்கிறார் என்றும், நட்பை ஒரு மாறுபட்ட கோணத்தில் அழகாக கொண்டு சென்ற இயக்குநருக்கு பாராட்டுகள் குவிந்தன.
திறமையான நடிகர் சூரி: பாக்ஸ் ஆபிசிலில் கல்லாக் கட்டிய இத்திரைப்படம், 50 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது. இதையடுத்து கருடன் படத்தின் வெற்றி விழாவில் சென்னையில் நடைபெற்றது. இதில், சசிக்குமார், சூரி,இயக்குநர், தயாரிப்பாளர் என பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன். சூரி எந்த கேரக்டர் பண்ண வேண்டும் என்றால் அதற்காக மெனக்கெடுவார். அவர் விடுதலை படத்தின் படப்பிடிப்பின் போது, தோளில் காயம் ஏற்பட்டது. அதோடு விடுதலை படத்தில் நடித்தார். அதே வலியோடு தான் கருடன் படத்திலும் கஷ்டப்பட்டு பண்ணி இருக்கார். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் என்னுடைய 100 சதவீதத்தை கொடுக்காமல் இருந்து விடக்கூடாது என்று சூரி நினைப்பது ஒரு இயக்குநரான எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
விலை உயர்ந்த பரிசு: இந்நிலையில், கருடன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் கே. குமார், BMW 7 சீரிஸ் சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ரசிகர்களும் இந்த தகவலை அறிந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றால் கார் பரிசாக கொடுப்பது இப்போது வழக்கமாகி விட்டதால், கருடன் தயாரிப்பாளரும் சூரிக்கு காரை பரிசாக கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











