Vijay: நா ரெடி பாட்டுல விஜய் 10 வருஷம் இளமையா தெரிவார்.. தயாரிப்பாளர் லலித்குமார் உற்சாகம்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. தற்போது சென்னையில் இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய லோகேஷ் திட்டமிட்டு அதற்கான வேலைகளை நடத்தி வருகிறார். தற்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளின் சூட்டிங் நடந்து வருகிறது.
முன்னதாக இந்தப் படத்தின் பிரம்மாண்டமான பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. விஜய் பாடியுள்ள இந்தப் பாடல் விஜய் பிறந்தநாளையொட்டி வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது.

நா ரெடி பாடல் மற்றும் விஜய் குறித்து பேசிய லலித்குமார்: நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தக் கூட்டணி முன்னதாக மாஸ்டர் படத்திலும் இணைந்திருந்தது. அந்தப் படத்தில் விஜய்யை வித்தியாசமான வாத்தியாக காட்டியிருந்தார் லோகேஷ். ஏனோதானோவென்று இருக்கும் அவரது வாழ்க்கையில் சிறுவர்களின் மரணம் ஏற்படுத்தும் மாற்றத்தையும் அதையடுத்து அவரது அதிரடி ஆக்ஷனையும் இந்தப் படத்தின் கதைக்களமாக கொடுத்திருந்தார்.
இந்தப் படம் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில், தற்போது லியோ படத்தில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்துள்ள நிலையில், இதுவும் படத்திற்கு ஏராளமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் வயதான கேங்ஸ்டர் வேடத்தில் விஜய் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இந்த கெட்டப்பில் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்னும் சில தினங்களில் நடிகர் விஜய் தன்னுடைய 49வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதையொட்டி அவரது ரசிகர்கள் மிகவும் சிறப்பான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கான போஸ்டரும் வெளியாகி விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பதாக காணப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனது சமீபத்திய பேட்டியில், இந்தப் பாடலில் நடிகர் விஜய் 10 ஆண்டுகள் இளமையுடன் காணப்படுவார் என்று தெரிவித்துள்ளார். வாத்தி கம்மிங் பாடலைப் போலவே, இந்தப் பாடலும் மிகப்பெரிய ஹிட்டை கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் 2000 டான்சர்களை வைத்து 8 நாட்கள் இந்தப் பாடல் திட்டமிடப்பட்டதாக லலித்குமார் கூறியுள்ளார்.
ஆனால் தினேஷ் மாஸ்டரை அழைத்து பாடலை 7 நாட்களில் முடிக்க விஜய் கேட்டுக் கொண்டதாக, அதற்காக இரவு, பகல் பாராமல் தன்னுடைய ஒத்துழைப்பை தர தயாராக உள்ளதாக விஜய் கூறியதாகவும் லலித்குமார் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி பாடல் சூட்டிங் 7 நாட்களில் நிறைவடைந்ததால், தனக்கு ஒரு கோடி ரூபாய் வரை தான் சேமித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தயாரிப்பாளர்களின் சிரமத்தை போக்குவதில் விஜய் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாடல் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாகவும் இந்தப் பாடல் வெளியானவுடன் இதுதான் டாக் ஆப் தி டவுனாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் விஜய்யை போல சிறப்பாக நடனம் செய்ய யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பாடலின் காட்சிகள் மிகுந்த கைத்தட்டலை பெறும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இதனிடையே, இந்தப் படம் எவ்வளவு பெரிய லெவலுக்கு போகும்னே தெரியாது என்று இசையமைப்பாளர் அனிருத் தன்னிடம் பாராட்டு தெரிவித்ததையும் லலித்குமார் சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











