விஜய் செய்த அந்த செயல்.. ஒரு நிமிஷம் ஆடிப்போனேன்.. கண்கலங்கிய தயாரிப்பாளர்!
சென்னை: விஜய்யை வைத்து மாண்புமிகு மாணவன் படத்தை தயாரித்தேன், அந்த படம் ஓடவில்லை. அதனால், விஜய் மீது எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. ஆனால், அவர் என் மீது வைத்து இருக்கும் மரியாதையைப் பார்த்து உண்மையில் நான் நெகிழ்ந்துவிட்டேன் என்று, மாணிக்கம் நாராயணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் ஸ்ரீரங்கத்து தேவதைகள், அலை ஓசை, வாழ்க்கை போன்ற தொடர்களை தயாரித்துள்ளவர். மேலும் கூலி, மாண்புமிகு மாணவன், சீனு, வேட்டையாடு விளையாடு போன்ற ஹிட் படங்களையும் தயாரித்துள்ளார்.

மாணிக்கம் நாராயணன்: படங்கள் தயாரிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கும் மாணிக்கம் நாராயணன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மேலும் விஜய்யை வைத்து நான் படம் எடுத்து இருக்கிறேன், இப்போதும் அவருக்கு என் மீது மரியாதை உண்டு. நான் வடிவேலுவை வைத்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தை எடுத்தேன். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு விஜய் வருகிறார் என்று சொல்லி சூர்யாவிடம் அனுமதி வாங்கிவிட்டேன். இதையடுத்து, இசைவெளியீட்டு விழாவிற்கு அவரை அழைக்க சென்றபோது, விஜய் என் கையை பிடித்துக்கொண்டு, மீடியாவில் நான் பேசியது தற்போது சர்ச்சையாக இருக்கிறது.
நெகிழ்ந்துவிட்டேன்: இதனால், என்னால் இசைவெளியீட்டு விழாவிற்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டார். இதனால், மிகுந்த மனவருத்தத்தில் இருந்தேன். ஆனால், படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்து கொண்டு இருக்கும் போது, யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வந்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அந்த நேரத்தில் உண்மையில் நான் உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டேன். அதன் பிறகு என்னை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தினார். விஜய்யின் இந்த செயலை என்னால் நிச்சயம் மறக்கவே முடியாது என்றார்.
மனுஷனா அவன்: தொடர்ந்து பேசிய அவர், மணிரத்னத்தை பற்றி பேசவே எனக்கு விருப்பம் இல்லை. ரொம்ப மோசமான மனுஷன். நாற்பது வயதில் ஒருவருக்கு உதவி செய்ய மனம் வரவில்லை என்றால் சரி ஏதோ வயது என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த வயதில் மற்றவர்களுக்கு உதவி செய்ய அவருக்கு மனம் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. ஜிவியின் இறப்பிற்கு மணிரத்னமும் ஒரு காரணம். ஜிவியும் நானும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் அவருக்கு நான் நிறைய உதவிகள் செய்திருக்கிறேன்.
உதவி செய்யவில்லை: ஜிவி பண கஷ்டத்தில் இருந்த போது மணிரத்னம் உதவி செய்யவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்ட அன்று நான் ஊரில் இல்லை. நான் இருந்து இருந்தால், அவர் இறந்து இருக்க மாட்டார். அவர் கடைசியாக, என்னுடைய வீட்டிற்கு போன் செய்து என் மனைவியிடம் விஷயத்தை சொல்ல, போனை வைத்துவிட்டு, தூக்கில் தொங்கி விட்டார். அப்பேர்ப்பட்ட தயாரிப்பாளரை எந்த நடிகனும் காப்பாற்றவில்லை. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை நான் ரிலீஸ் செய்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார் என்று மணிரத்னம் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications











