Manickam narayanan: சிம்பு குறித்து தப்பா பேசிய மாணிக்கம் நாராயணன்.. போட்டுக் கொடுத்த கௌதம் மேனன்!
சென்னை: வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். இவருக்கு வேட்டையாடு விளையாடு, முன் தினம் பார்த்தேனே உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே கை கொடுத்த நிலையில் பல படங்கள் சொதப்பலான வசூலை கொடுத்தன. தற்போது அவர் தயாரிப்பிலிருந்து விலகியுள்ளார்.
யூடியூப் சேனல்களுக்கு அவர் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தயாரிப்பிலேயே வேட்டையாடு விளையாடு படம் மட்டுமே மிகச் சிறப்பாக அமைந்ததாகவும் மற்றவை எல்லாம் குப்பைகளாகவே அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் வேட்டையாடு விளையாடு 2 படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்: வேட்டையாடு விளையாடு. முன்தினம் பார்த்தேனே உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளவர் மாணிக்கம் நாராயணன். தற்போது தயாரிப்பில் இருந்து இவர் ஒதுங்கியுள்ளார். அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் வேட்டையாடு விளையாடு 2 படத்தை தயாரிக்கும் திட்டம் தனக்கு இருப்பதாக இவர் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அஜித், மணிரத்னம் உள்ளிட்ட பலரையும் அவர் தன்னுடைய சமீபத்திய யூடியூப் பேட்டிகளில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் அஜித்திற்கு கிடையாது என்று பலவாறாக இவர் தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார்.
அஜித் குறித்த கடுமையான விமர்சனம்: அஜித்தை யாரும் தானாகவே முன்வந்து படத்தில் நடிக்க அழைக்க மாட்டார்கள் என்றும் இவராக சென்று தான் படங்களை கமிட் செய்வார் என்றும் முன்னதாகவே தனக்கான பணத்தை வாங்கிக் கொள்வார் என்றும் பலவாறாக இவர் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் அவரது இந்த பேட்டி ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாகியது. இதனிடையே தான் உண்மையை தான் கூறுவதாகவும் அதனால் தான் இத்தகைய விமர்சனங்களை செய்தாலும் தன்னிடம் யாரும் சண்டைக்கு வருவதில்லை என்றும் அவ்வாறு சண்டைக்கு வந்தால் அதற்கு தான் தயாராக இருப்பதாகவும் தன்னிடம் அதற்கான காரணங்கள் மற்றும் சாட்சிகள் உள்ளதாகவும் மேலும் பல விஷயங்களை இவர் தெரிவித்துள்ளார்.
சிம்பு குறித்து தவறான பேச்சு: இந்நிலையில் சிம்பு குறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள மாணிக்கம், தனக்கும் சிம்புவிற்கும் செட்டாகாது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சிம்புவை வைத்து தன்னால் படம் தயாரிக்க முடியாது என்று தான் கௌதம் மேனனிடம் கூறியதாகவும் அப்படி தயாரிக்க வேண்டும் என்றால் சிம்புவின் அப்பா டி ராஜேந்தர் வந்தால் தான் அது குறித்து யோசிக்க முடியும் என்றும் கூறி இருந்ததாகவும் இதை சிம்புவிடம் கௌதம் மேனன் போட்டுக் கொடுத்ததாகவும் தன்னுடைய பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து தன்னிடம் சிம்பு தொலைபேசி மூலம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிம்புவின் மாற்றம் நல்லது: டி ராஜேந்தர் போலவே சிம்புவும் நல்ல பையன் தான் என்று கூறியுள்ள மாணிக்கம் நாராயணன், ஆனால் அவருடைய குண நலன்கள் எனக்கு செட்டாகாது என்றும் அதனால் தான் அவரை வைத்து படம் தயாரிக்க தான் தயாராக இல்லை என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தற்போது சிம்புவின் குணங்கள் மற்றும் நடவடிக்கைகள் மாறி உள்ளதாக கூறப்படுவது வரவேற்க வேண்டிய விஷயம் தான் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











