மகாராஜா என்னுடைய கதை.. என்னை ஏமாத்திட்டாங்க.. இயக்குனரை விளாசிய தயாரிப்பாளர்!
சென்னை: திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தின் கதை என்னுடையது, அதை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் திருடிவிட்டார். இதற்கான அனைத்து ஆதாரமும் என்னிடம் உள்ளது, இதற்கு நியாயம் கேட்டு எந்த அளவிற்கு வேண்டுமானாலும் நான் செல்வேன் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நித்திலன் இயக்கத்தில் குரங்கு பொம்மை படம் வெளியாகி விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து, தற்போது அவர் இயக்கி உள்ள படம் மகாராஜா. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 14ந் தேதிவெளியான இத்திரைப்படம், இதுவரை உலகளவில் ரூ. 92 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

தயாரிப்பாளர் பேட்டி: இந்நிலையில், கந்தவேல் படத்தின் தயாரிப்பாளர் மருதமுத்து அளித்துள்ள பேட்டியில், 2020ம் ஆண்டு இந்த கதையை இயக்குநர் என்னிடம் கூறினார். கதை பிடித்து இருந்ததால், இதை சிறு குறும்படமாக எடுத்து அனைவருக்கும் காண்பிக்க வேண்டும் என்று, நான் பணத்தை கொடுத்து குறும்படம் எடுக்க சொன்னேன். குறும்படம் எடுத்து கொடுத்தார். குறும்படமும் சிறப்பாக இருந்தது. இதையடுத்து, 2022ல் இருந்து, இப்படத்தை திரைப்படமாக எடுக்க சபரி பிக்சர்ஸ் குழுவினரிடம் பேசினேன். என் படத்தை அத்தியாசம் ஒன்று என்ற பெயரில் எடுக்க முயற்சி செய்து கொண்டு இருந்தேன். என்னுடைய படத்தில் நடிகர்களாக கே.எஸ்.ரவிக்குமார், சார்லி, அப்புக்குட்டி போன்ற நடிகர்களிடம் கால்ஷீட் வாங்கி அனைத்து பணிகளை செய்து கொண்டிருந்தேன். ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக மழை செய்ததால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
அது என்னுடைய கதை: இதையடுத்து, மகாராஜன் படம் குறித்து என் நண்பர்கள் என்னிடம் சொன்னதை அடுத்து படத்தை பார்த்தேன். படம் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன், அந்த படத்தின் கதை முழுக்க முழுக்க என்னுடைய கதை. இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் கொடுத்தேன். இந்த படத்தின் கதையை நான் ஏற்கனவே பதிவு செய்து இருக்கிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் படத்தின் கதை எப்படி வெளியில் சென்றது. என்னைப்போன்ற தயாரிப்பாளர்கள் வளரக்கூடாது என்பதற்காக, அங்கு ஒரு கூட்டமே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. நடிகர் விஷால் அவர்கள், சிறு தயாரிப்பாளர்கள் வர வேண்டும் என்றார். ஆனால், எங்களை போன்ற தயாரிப்பாளர்கள் வளரவிடப்படுவதில்லை.
திருட்டு நாய்: இந்த படத்தில் விஜய்சேதுபதி அவர்கள் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால், இயக்குநர் என்ற முறையில் அந்த திருட்டு நாய், என் கதையை திருடிவிட்டது. சமூகத்தில் வாழத்தெரியாத, அந்த இயக்குநர் கதையை திருடிச்சென்றுவிட்டார். நான் பெற்ற பிள்ளைக்கு நான் தான் பெயர்வைக்க வேண்டும். குறும்படம் எடுத்ததற்கான ஆதரரம், அதை பதிவு செய்ததற்கான ஆதரரம் என்னிடம் உள்ளது. இதற்கு நியாயம் கேட்டு எந்த அளவிற்கு வேண்டுமானாலும் நான் செல்வேன் என்று தயாரிப்பாளர் அந்த பேட்டியில் ஆவேசமாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











