சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.. பிரபலங்கள் இரங்கல்
ஹைதராபாத்: சிவகார்த்திகேயனின் எஸ்கே 20 உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நரங் காலமானார்.
பிரபல டோலிவுட் தயாரிப்பாளரான நாராயண் தாஸ் 650க்கும் அதிகமான படங்களுக்கு ஃபைனான்ஸியராக இருந்துள்ளார்.
சமீபத்தில் வெளியான நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த லவ் ஸ்டோரி படத்தின் தயாரிப்பாளரும் இவர் தான்.

நாராயண் தாஸ் நரங் காலமானார்
ஏசியன் குரூப் நிறுவனத்தின் சேர்மேனும் பிரபல தயாரிப்பாளருமான நாராயண் தாஸ் நரங் இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார். வயது மூப்பு மற்றும் உடல் நலைக் குறைவு காரணமாக ஸ்டார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நாராயண் தாஸ் நரங் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 76.

பிரபல தயாரிப்பாளர்
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 650க்கும் அதிகமான படங்களுக்கு ஃபைனான்ஸியராக இருந்துள்ள இவர், நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி, நாக சூர்யாவின் லக்ஷ்யா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தனுஷின் டி46 திரைப்படத்தையும் இவர் தான் தயாரித்து வருகிறார். அந்த படத்தை சேகர் கம்முலா இயக்க உள்ளார்.

சிவகார்த்திகேயன் இரங்கல்
தனுஷ் படம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு பைலிங்குவலாக உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் எஸ்கே 20 திரைப்படத்தையும் இவர் தான் தயாரித்துள்ளார். நாராயண் தாஸ் நரங் உயிரிழந்த தகவலை அறிந்ததும் நம்முடைய அன்பிற்குரிய தயாரிப்பாளர் மறைந்து விட்டாரே என அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு இரங்கல்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நரங் காலமானது தனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் உள்ளது. சினிமாவை அந்த அளவுக்கு நேசித்த ஒரு மனிதன் இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டாரே என மகேஷ் பாபு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இறுதி சடங்கு
இன்று மாலை 4 மணிக்கு மஹாபிரஸ்தனம் எனும் இடத்தில் நாராயண் தாஸ் நரங்கின் இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரது மகனும் முன்னணி தயாரிப்பாளருமான சுனில் நரங் தெரிவித்துள்ளார். டோலிவுட் திரையுலகின் பிரபலங்கள் பலரும் இந்த இறுதி சடங்கில் கலந்து கொள்ள உள்ளனர். ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் மறைந்த தயாரிப்பாளருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











