'கஜானா' ப்ரோமோஷனுக்கு யோகிபாபு ஏன் வரல.. 7லட்சம் கொடுத்திருந்தா வந்துருப்பாரு.. விளாசிய தயாரிப்பாளர்
சென்னை: அட்வெஞ்சர் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகி இருக்கும் 'கஜானா' படத்தில் இனிகோ பிரபாகர் நாயகனாகவும், வேதிகா நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். மேலும், யோகி பாபு, சாந்தினி, நான் கடவுள் ராஜேந்திரன், பியாண்ட், செண்ட்ராயன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் யோகி பாபு கலந்து கொள்ளாததை வன்மையாக கண்டித்த தயாரிப்பாளர் ராஜா, யோகி பாபு நடிகராக இருக்கவே லாயக்கு இல்லை என்றார்.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் 'கஜானா' திரைப்படம் மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் டி கிரியேஷன்ஸ் சார்பில் திருமலை படத்தை வெளியிடுகிறார். அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
கஜானா: இதன் இசைவெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராஜா, ஒரு இயக்குநர் மட்டும் தான் ஒரு சண்டை காட்சியையோ, ஒரு காட்சியையோ கம்போஸ் செய்ய முடியும். கஜானா படத்தின் இயக்குநர் செய்தது தான் இது எல்லாமே. அவரைப்போல ஒரு இயக்குநரையோ, தயாரிப்பாளரையோ யாருமே பார்த்திருக்க முடியாது. இந்த படம் வெளியானதற்கு பின் மிகப்பெரிய இயக்குநர் என அவர் பெயர் எடுப்பார், அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் இயக்குநருக்கு பஞ்சம், நடிகர்களுக்கு பஞ்சம், தயாரிப்பாளர்களுக்கு பஞ்சம், விநியோகஸ்தருக்கு பஞ்சம். இந்த படத்தை பணத்தை செலவு செய்து எடுத்து இருக்கிறார். எத்தனையோ திரைப்படங்கள் இருந்தாலும் கஜானா திரைப்படமும் ஒரு பேசக்கூடிய படமாக இருக்கும் என்றார்.

காலம் பதில் சொல்லும்: தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் ராஜா, இந்த படத்தில் யோகி பாபு ஒரு முக்கியமான ரோலில் நடித்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது, இந்த ப்ரோமோஷனுக்கு அவர் வந்து இருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை. அவருக்கு 7 லட்சம் ரூபாய் போய் இருக்காது, பணம் போய் இருந்தால், நிச்சயம் அவர் வந்து இருப்பாரு. இது எவ்வளவு பெரிய கேவலமான விஷயம், நான் நடித்த படத்தின் ப்ரோமோஷனுக்கு வரவில்லை என்றால் என்ன அர்த்தம். ஒரு நடிகனுக்கு தான் நடித்த படம் என்பது ஒரு குழந்தை போன்றது. ஒரு குழந்தையை வளர்க்கத் தெரியாதவன் நடிகனாக இருக்கவே லாயிக்கு இல்லை. படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட நீங்க வரமாட்டீங்களா... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு எல்லாம் காலம் கூடிய விரைவில் பதில் சொல்லும் என்றார்.
முன்னதாக பேசிய தயாரிப்பாளர் மதியழகன், கஜானா படத்தின் தலைப்பே மிக அழகானது. ரொம்ப பாசிட்டிவான தலைப்பு. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சாம் அதிகம் பேச மாட்டார். இவ்வளவு பெரிய படம் எடுத்துவிட்டு ரொம்ப சாதாரணமாக இருக்கிறார். நான் இந்த படத்தை பார்த்தேன், மிக சிறப்பாக வந்து இருக்கிறது. முன்பேல்லாம் படம் எடுப்பது என்பது கஷ்டம். ஆனால், இப்போது, படம் எடுப்பது கஷ்டம் இல்லை, ஆனால், படத்தை ரிலீஸ் செய்வதற்குள், பாதி உயிர் போய் விடுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், இந்த படத்தை இவ்வளவு பெரிய அளவில் வெளியிடும் திருமலைக்கு வாழ்த்துகள், அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார்.


Click it and Unblock the Notifications











