லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கு காரணம் தெரியுமா?.. தயாரிப்பாளர் ஓபன் டாக்
சென்னை: லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் தனது வேலையை உதறிவிட்டு மாநகரம் படத்தை இயக்கினார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர் கோலிவுட்டில் மிகப்பெரிய ரவுண்ட் வருவார் என பலரின் நம்பிக்கையையும் பெற்றார்.

நம்பிக்கையை காப்பாற்றிய லோகேஷ் கனகராஜ்
அந்த நம்பிக்கை பொய்த்துபோகாதபடி அடுத்த படத்தை கார்த்தியை வைத்து இயக்கினார் லோகேஷ். கைதி படம் ஒரு இரவில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டிருந்தாலும் அனுபவம் வாய்ந்த இயக்குநர் எப்படி இயக்குவாரோ அப்படி இருந்தது லோகேஷின் இயக்கம். முதல் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற சூழலில் இரண்டாவது படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்த லோகேஷ் அதுவரை யாரும் பார்க்காத விஜய்யை திரையில் காண்பித்தார். இந்தப் படமும் மெகா ஹிட்டானது. தொடர்ந்து கமல் ஹாசனுடன் இணைந்தார் லோகேஷ் கனகராஜ்.

விக்ரமில் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்
தான் எவ்வளவு பெரிய கமல் ஹாசனின் ரசிகர் என்று பலமுறை பதிவு செய்திருக்கும் லோகேஷ் கமலை வைத்து எந்த மாதிரியான படத்தை இயக்கப்போகிறார் என்ற ஆவல் ஒட்டுமொத்த திரையுலகுக்கும் இருந்தது. அந்த ஆவலை பொய்யாக்காதபடி லோகேஷ் விக்ரம் படத்தை தரமாக உருவாக்கியிருந்தார். கமல் ஹாசனுக்கு ஜோடி வைக்காதது, கமலிடமிருந்து டயலாக் டெலிவரியை தனித்துவமாக வாங்கியது என காட்சிக்கு காட்சி தான் கமலின் எவ்வளவு பெரிய ரசிகன் என்பதை நிரூபித்தார்.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்
விக்ரம் படத்திலேயே உச்சக்கட்டம் என்பது அவர் திரைக்கதை அமைத்த விதம்தான். கமலின் பழைய விக்ரம் கதாபாத்திரத்தை இணைத்தது, கைதி படத்தின் கதாபாத்திரங்களை இணைத்தது, சூர்யாவை ரோலக்ஸ் கதாபாத்திரம் செய்ய வைத்தது என விக்ரமில் லோகேஷ் கனகராஜ் செய்தது எல்லாமே மேஜிக்தான். படமும் மெகா ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. இதனையடுத்து லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற பதம் உருவானது.
ஹாலிவுட்டில் இப்படி சினிமாட்டிக் யுனிவர்ஸ் இருந்தாலும் தமிழில் அதை அறிமுகப்படுத்திய பெருமை லோகேஷுக்கே சேரும். விக்ரம் படத்துக்கு பிறகு இந்தியாவிலேயே முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ஆனார் லோகேஷ் கனகராஜ். தற்போது அவர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படமும் எல்சியூவில் வருமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கு காரணம் தெரியுமா?
இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "மற்ற இயக்குநர்களைவிட லோகேஷ் கனகராஜிடம் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தேவையில்லாமல் அவர் தயாரிப்பாளரின் பணத்தை செலவழிக்கமாட்டார். உதாரணத்திற்கு விக்ரம் படத்தில் ஃபஹத் பாசிலுக்கு ஜோடியாக முன்னணி நடிகையை லோகேஷ் கனகராஜால் நடிக்க வைத்திருக்க முடியும் ஆனால் நன்கு நடிக்கும் நாயகியே போதும் என காய்த்ரியை நடிக்க வைத்தார்.

எது தேவையோ அதில் தெளிவாக இருப்பார் லோகேஷ்
அதேபோல் மாஸ்டர் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக வளர்ந்துவரும் நாயகியான மாளவிகா மோகனனைத்தான் நடிக்க வைத்தார். ஆனால் லோகேஷ் கேட்டிருந்தால் தயாரிப்பாளர் பணத்தை கொட்டியிருப்பார். இருப்பினும் எது தேவையோ அதில் தெளிவாக இருந்தார் லோகேஷ் கனகராஜ். தயாரிப்பாளர் பணத்தை வீண் செலவு செய்யாமல் இருப்பதால்தான் லோகேஷ் கனகராஜ் இன்று மிகப்பெரிய வெற்றி இயக்குநராக வலம் வருகிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











