சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டம்.. லாரன்ஸிடம் உதவி கேட்கும் எம்.ஜி.ஆர் பட தயாரிப்பாளர் பேத்தி!
சென்னை: பழம்பெரும் எம்.ஜி.ஆர் பட தயாரிப்பாளரின் பேத்தி, தங்களுக்கு உதவுமாறு நடிகர் ராகவா லாரன்ஸுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ், இந்த கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
பல்வேறு அமைப்புகளுக்கும் சங்கங்களுக்கும் நிவாரண நிதிகளை வாரி வழங்கினார். இப்போதும் வழங்கி வருகிறார்.

தயாரிப்பாளர் வேலுமணி
இந்நிலையில் பழம்பெரும் தயாரிப்பாளரின் பேத்தி ஒருவர், சாப்பாடில்லாமல் தாங்கள் கேரளாவில் கஷ்டப்பட்டு வருவதாகவும் உதவி செய்ய யாரும் இல்லாததால், உதவி செய்யுமாறும் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி (சரவணா ஃபிலிம்ஸ்) பேத்தி புவனா சரவணன், நான்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா
படகோட்டி, பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், சந்திரோதயம், குடியிருந்த கோயில், பாலும் பழமும், பாதகாணிக்கை, பாகப்பிரிவினை, பஞ்சவர்ணகிளி போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்து, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பெரும் அபிமானம் பெற்றவர் எனது தாத்தா வேலுமணி என்பதை எல்லோரும் அறிவார்கள்.

உணவு இல்லாமல்
தற்சமயம் நானும், எனது தாயாரும் கஷ்டமான, மோசமான நிலையில் உள்ளோம். எனது தாயாருக்கு 69 வயது ஆகிறது. ரத்த வாதத்தினால் மிகவும் அவதிப்படுகிறார். தற்சமயம், நாங்கள் கேரளாவில் இருக்கிறோம். இங்கே எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. தங்குவதற்கு வீடு இல்லாமல், உண்ண உணவு இல்லாமல், மிகவும் கஷ்டத்தில் உள்ளோம். நானும், எனது தாயாரும், மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அவதிப்படுகிறோம்.

கோபிசெட்டி பாளையம்
எங்களை காப்பாற்றுங்கள். நானும் எனது தாயாரும் எங்களது ஊரான கோபிசெட்டி பாளையத்திற்குச் செல்லவும், தங்குவதற்கு ஒரு வீடும் பெற உங்களின் உதவியை நாடி இக்கடிதத்தை அனுப்புகிறேன். ஆந்திரவாசிகளை, இதர தேசவாசிகளை அந்தந்த முதல்வர்களிடம் பேசி சொந்த ஊர் அனுப்பி வைத்தீர்கள். பத்திரிகை, ஊடகங்களில் பார்த்தேன்.

யாரும் இல்லை
கேரளாவில் ஆதரவின்றி தவித்து வருகிறோம். நம் முதல்வரிடம் பேசி சொந்த ஊர் அனுப்ப உதவுங்கள். சாப்பாடு கூட இல்லை. நான் பெண்ணாக இருப்பதால் முடியவில்லை. ப்ளீஸ், கேரளாவில் உள்ள எங்களை மீட்கவும். உங்களைத் தவிர எங்களை காப்பாற்ற யாரும் இல்லை. எங்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களிடம் கை ஏந்தி மண்டியிட்டு எங்களை காப்பாற்றுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன், எங்களை காப்பாற்றுங்கள்.


Click it and Unblock the Notifications











