SA Rajkannu: அதிர்ச்சி.. 16 வயதினிலே படத் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு காலமானார்.. பாரதிராஜா வேதனை!
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், பூ பூத்த நந்தவனம், கமல்ஹாசனின் மகாநதி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு.

அவரது மறைவு செய்தியை அறிந்த இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் மனவேதனையுடன் போட்டுள்ள பதிவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தயாரிப்பாளர் ராஜ்கண்ணு காலமானார்: தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கத்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு கடந்த மே மாதம் குளிக்கும் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால், வயது மூப்புக் காரணமாக உடனடியாக அவர் குணமாகவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று இரவு காலமானதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாரதிராஜா மன வேதனை: தன்னை இயக்குநராக அறிமுகப்படுத்திய 16 வயதினிலே படத்தின் தயாரிப்பாளர் காலமான செய்தி அறிந்ததுமே இயக்குநர் பாரதிராஜா மிகவும் மன வேதனை அடைந்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், "16 வயதினிலே திரைப்படத்தின்
வாயிலாக என்னை இயக்குனராக
அறிமுகம் செய்து, என் வாழ்வில்
ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற
என் முதலாளி
திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின்
மறைவு,பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது.
அவரின் மறைவு எனக்கும்
என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்." என பதிவிட்டுள்ளார் பாரதிராஜா.

பிரபலங்கள் இரங்கல்: தமிழ் சினிமாவுக்கு பல நல்ல படங்களை கொடுத்து வந்த பிரபல தயாரிப்பாளர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததை அறிந்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் ராஜ்கண்ணு மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
16 வயதினிலே படத்தை மறக்க முடியுமா: கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் 1977ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட 16 வயதினிலே படத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து விட மாட்டார்கள்.
அந்த படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மகாநதி படத்தையும் தயாரித்தவர் ராஜ்கண்ணு.


Click it and Unblock the Notifications











