இண்டஸ்ட்ரியில் இவர்தான் இன்னொரு விஜயகாந்த்.. விஜய் ஆண்டனியை புகழ்ந்த தயாரிப்பாளர்
சென்னை: விஜய் ஆண்டனி முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இசையமைப்பாளராக மட்டும் வலம் வந்துகொண்டிருந்த அவர் நான் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடித்துவரும் அவர் கடைசியாக ரோமியோ படத்தில் நடித்திருந்தார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவரது நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் என்ற படம் ரிலீஸாகவிருக்கிறது. படத்தை விஜய் மில்டன் இயக்கியிருக்கிறார்.
சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அந்தப் படத்தில் அவர் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். இதனையடுத்து ஜீவா நடித்த டிஷ்யூம் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அடையாளப்பட்டார் விஜய் ஆண்டனி. இருப்பினும் அவரை முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் அமர வைத்தது காதலில் விழுந்தேன் திரைப்படம். குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 'நாக்க முக்க' பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. அந்தப் பாடலின் ஹிட்டுக்கு பிறகு முன்னணி இசையமைப்பாளராக மாறிய விஜய் ஆண்டனி விஜய் நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்தார்.

ஹீரோ விஜய் ஆண்டனி: இந்தச் சூழலில் விஜய் ஆண்டனி 'நான்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கனகச்சிதமான நடிப்பை வழங்கிய விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அப்படி அவர் நடித்த 'சலீம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பல படங்களில் நடித்தாலும் பூ பட இயக்குநர் சசி இயக்கத்தில் அவர் நடித்த பிச்சைக்காரன் படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் கதையும், அவரது நடிப்பும் படத்தை பெரும் ஹிட்டாக்கின.
இயக்குநர் விஜய் ஆண்டனி: பிச்சைக்காரன் கொடுத்த வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தையும் சசி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. எனவே இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர் என இருந்த விஜய் ஆண்டனி இயக்குநராகவும் இப்படத்தின் மூலம் அவதாரம் எடுத்தார். இப்படத்தின் ஷூட்டிங்போதுதான் விஜய் ஆண்டனி விபத்தை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துயரம்: ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்ட அவருக்கு மீள முடியாத துயரமாக அமைந்தது அவரது மகள் மீராவின் மரணம். ஏதோ காரணத்தால் கடந்த வருடம் அவர் தற்கொலை செய்துகொண்டார். அதன் காரணமாக விஜய் ஆண்டனி உடைந்தே போய்விட்டார். தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் ஹிட்லர் படத்தில் நடித்திருக்கிறார் அவர். கடைசியாக அவரது நடிப்பில் ரோமியோ படம் வெளியானது.
அக்னி சிறகுகள்: இதற்கிடையே மூடர் கூடம் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நவீன் குமார் விஜய் ஆண்டனியையும், அருண் விஜய்யையும் வைத்து அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்கினார். ஆனால் படம் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அந்தப் படத்தை தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் சிவா சமீபத்திய பேட்டியில் விஜய் ஆண்டனி குறித்து பேசியிருக்கிறார்.
சிவா பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜய் ஆண்டனியை இன்னொரு விஜயகாந்த்தாகவே நான் பார்க்கிறேன். அவ்வளவு எளிமையானவர் அவர். அக்னி சிறகுகள் ஷூட்டிங் நடக்கும்போது தனக்கு கேரவன் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அருகில் இருந்த ஃப்ளாட்பார்ம் மற்றும் திட்டுக்களில் அமர்ந்துகொண்டிருப்பார். சாதாரண அறைகளில்தான் தங்கினார். எனக்கு எந்த செலவையும் அவர் வைக்கவே இல்லை" என்று புகழ்ந்திருக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக விஜய் மில்டன் இயக்கியிருக்கும் மழை பிடிக்காத மனிதன் படம் வெளியாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











