செத்தா இப்படி சாகணும்யா..கேப்டன் நினைச்சமாதிரியே நடந்துடுச்சி.. கண்கலங்கிய தயாரிப்பாளர்!
சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினரை மட்டுமில்லாமல், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் மறைந்து இரண்டு வாரத்திற்கு மேலானபோதும் அவரின் நினைவிடத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், விஜயகாந்த் குறித்து தயாரிப்பாளர் டி. சிவா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவில் இருந்து விலகினார். அரசியலிலும் சினிமாவிலும் மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தை பிடித்த விஜயகாந்தை பிடிக்காதவர்களே யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு அவர் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று வந்தார். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. பின் உடல் நலம் பெற்ற விஜயகாந்த், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இதையடுத்து டிசம்பர் 14ந் தேதி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பிரேமலதா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
நினைவிடத்தில் அஞ்சலி: இதையடுத்து, டிசம்பர் 28ந் தேதி விஜயகாந்த் சிகிக்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது. விஜயகாந்தின் மறைவு அவரது ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின்,72 குண்டுகள் முழங்க உடல் முழு அரசு மரியாதையுடன் சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
செத்தா இப்படி சாகணும்யா: கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விஜய் தொலைக்காட்சி நீயா நானா நிகழ்ச்சி நடத்தியது.இந்த நிகழ்ச்சியில் சினிமாவில் அவருடன் பணியாற்றியவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து விஜயகாந்தின் வள்ளல் குணம் குறித்தும், அவரின் நல்ல பண்ககள் குறித்தும் பேசினார்கள். அப்போது பேசிய தயாரிப்பாளர் டி. சிவா, புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் திடீர் மறைவை விஜயகாந்தால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எம்ஜிஆர் இறப்புக்கு பின் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தோம். அதுவரை இறுக்கமாக, அமைதியாக இருந்த விஜயகாந்த், செத்தா இப்படி சாகணும்யா என்று சொன்னாரு. அது இப்போது கேப்டன் மறைவுல நடந்து இருக்கு.
விஜயகாந்த் இறந்த போது மக்கள் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுததை பார்த்த போது எனக்கு, விஜயகாந்த் அன்று சொன்னது தான் நினைவுக்கு வந்தது. அவர் செஞ்ச புண்ணியம் காரணமா அவர் நினைச்சது நடந்துருச்சு என்று தயாரிப்பாளர் டி சிவா விஜயகாந்த் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











