அவர்தான் அடையாளப்படுத்தினார்.. நன்றியுடன் இருங்கள்.. பருத்திவீரன் பஞ்சாயத்தில் அமீருக்கு தயாரிப்பாளர் ஆதரவு
சென்னை: Ameer (அமீர்) பருத்திவீரன் தொடர்பான பஞ்சாயத்தில் இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
கோலிவுட்டில் பருத்திவீரன் பஞ்சாயத்து தலை தூக்கியுள்ளது. கார்த்தி 25 விழாவுக்கு தனக்கு அழைப்பு வரவில்லை அதனால் செல்லவில்லை என அமீர் கூற; அடுத்ததாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் நக்கலான உடல்மொழியுடன் அமீரை தரம் தாழ்ந்து பேசியிருந்தார். குறிப்பாக அமீர் ஒரு திருடன். மார்க்கெட்டில் ஓடாத குதிரை என்று பேசியது எல்லாம் பெரும் கண்டனத்தை சம்பாதித்தது.

அவமரியாதை: இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு படைப்பாளியை இப்படியா அவமதிப்பது என கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். அதேபோல் இந்தப் பேச்சை பார்த்த அமீரும் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அமீரின் அறிக்கைக்கு அடுத்ததாக சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன், கரு.பழனியப்பன், பாரதிராஜா, பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் அமீருக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர்.
வருத்தம்: இயக்குநர் கரு.பழனியப்பன் தனது அறிக்கையில் ஒருபடி மேலே சென்று இந்த விவகாரத்துக்கு பின்னால் சிவக்குமார் குடும்பம் இருப்பதாக சந்தேக நிழல் விழுவதை தடுக்க முடியவில்லை. ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க சிவக்குமார் சொல்ல வேண்டும் என கூறியிருந்தார். இதனையடுத்து ஞானவேல் ராஜாவும் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அம்பானி ஃபேமிலி: சிவக்குமாரின் பெயர் இந்த விவகாரத்துக்குள் வந்ததும் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தார். ஆனால் அது போலியான வருத்தம் என சசிகுமார் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து இயக்குநர் சமுத்திரகனி வெளியிட்டிருந்த அறிக்கையில், 'ப்ரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்கு செல்லாது. பொதுவெளியில் மன்னிப்பு கேளுங்கள். பணத்தை திருப்பி கொடுங்கள். நீங்கள்தான் அம்பானி ஃபேமிலியாச்சே' என்று குறிப்பிட்டிருந்தார்.
சிவசக்தி பாண்டியன்: இந்நிலையில் தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்தவருமான சிவசக்தி பாண்டியன் இந்த விவகாரம் குறித்து அளித்த பேட்டி ஒன்றில், "அமீர் தரமான தயாரிப்பாளர். அவர்தான் கார்த்தியையும் ஸ்டூடியோ க்ரீன்ஸையும் அடையாளப்படுத்தினார். எனவே அவருக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். படத்தை லேட்டாக கொடுத்தார் என்று ஞானவேல் ராஜா சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்
அமீர் ஒரு கிரியேட்டர். ஒவ்வொரு கிரியேட்டருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். அமீர் நாளையே சூர்யாவை வைத்தோ, கார்த்தியை வைத்தோ ஒரு படத்தை இயக்கினால் அந்தப் படம் கண்டிப்பாக சில்வர் ஜுப்ளிதான்" என்றார். பருத்திவீரன் ரிலீஸ் தொடர்பான பிரச்னையின்போது சிவசக்தி பாண்டியன் தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











