கடின உழைப்பிற்கான பலன் கிடைத்தே தீரும்.. அருண்விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன தயாரிப்பாளர்!
சென்னை: நடிகர் அருண் விஜய்யின் 47வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரான விஜய்குமாரின் மகனான அருண் விஜய் முறை மாப்பிள்ளை படத்தின்மூலம் அவர் கடந்த 1994ல் தமிழில் அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தரவில்லை.

வாரிசு நடிகரின் மகன் என்ற அடையாளத்தோட சினிமாவில் நுழைந்தாலும், சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் பல்வேறு போராட்டங்களை சந்தித்தார். நீண்ட நாட்கள் காத்திருப்பிற்கு பிறகே திரையுலகில் அவருக்கு வெற்றி சாத்தியமானது.
நடிகர் அருண் விஜய்: அடுத்தடுத்து தோல்வித்திரைப்படங்களில் நடித்து துவண்டுபோன, அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து தன்னுடைய முழ திறமையையும் வெளிப்படுத்தினார். இந்தப் படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தது. இதைத் தொடர்ந்து குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகன் என பெயர் எடுத்தார்.
வணங்கான்: தற்போது, அருண் விஜய் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். தனது திறமையை நிரூபிக்கும் வகையில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற அருண் விஜய்யின் ஆசை தற்போது நிறைவேறி உள்ளது. இந்த படத்திற்காக அருண் விஜய் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி பெரும் பேசுபொருளானது.
பிறந்த நாள் வாழ்த்து: இந்நிலையில் இன்று 47வது பிறந்த நாளை கொண்டாடி வரும் அருண் விஜய்க்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், வணங்கான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் காமாட்சி, தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 'கடின உழைப்பிற்கான பலன் கிடைத்தே தீரும் என்பதற்கு சமீபத்திய உதாரணம். இன்னும் உழைத்து உயரமேற... வெற்றியாள வாழ்த்துகள். இன்றைய இனிய நாள் போல் வரும் எல்லா நாட்களும் இனிக்கட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











