பாலாவின் வணங்கான்.. எப்படி இருக்கு தெரியுமா?.. இதோ முதல் விமர்சனம்
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் இயக்கிய பல படங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பாலா வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். விரைவில் ரிலீஸாகவிருக்கும் படம் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது.
என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்: முதல் இரண்டு படங்களிலேயே முக்கியமான இயக்குநர் என்று பாலா பெயர் எடுத்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களும் மிகச்சிறந்த படைப்பாக இருக்கின்றனர். அதிலும் பாலா சொன்னால் நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைதான் சினிமாவில் இருந்தது. அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் தவம் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அவர் வணங்கான் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
நொந்த பாலா: பாலாவின் திரை வாழ்க்கை இப்போது ஒரு ஹிட்டுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பெர்சனல் வாழ்க்கையும் பிரச்னையிலேயே இருக்கிறது. தனது மனைவி மலரை விவாகரத்து செய்த அவருக்கு; இன்னொரு இடியாக இறங்கியது என்றால் வர்மா திரைப்படம். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்கான அதில்தான் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமானார். ஆனால் அந்தப் படத்தை பார்த்த தயாரிப்பு தரப்பும், விக்ரமும் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய ஒத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து அந்தப் படத்தை பாலா தனியாக ரிலீஸ் செய்தார். ஆனால் படம் கவரவில்லை.
சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி: இதன் காரணமாக வணங்கான் படத்தை ஹிட் படமாக கொடுக்க முனைப்போடு உழைத்திருக்கிறார் பாலா. படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. இந்நிலையில் படத்தை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது முகநூல் பக்கத்தில், "பாலா இயக்கிய வணங்கான் படத்தை பார்த்து நெகிழ்ச்சியாக இருக்கிறேன். வாயடைத்து போய்விட்டேன். அருண் விஜய்யின் நடிப்பு அபாரம். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள். பாலா மீண்டும் ஒருமுறை தன்னை யார் என்று நிரூபித்துவிட்டார். லவ் யூ பாலா அண்ணா" என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











