முகவரி இல்லாத ஹீரோக்களுக்கு பாலா அப்படிப்பட்டவர்.. விழா எடுக்கும் தயாரிப்பாளர்.. வெளியான அறிவிப்பு
சென்னை: பாலா இயக்கத்தில் தற்போது வணங்கான் திரைப்படம் உருவாகியிருக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். படத்தை பார்த்த அருண் விஜய் அண்மையில் நெகிழ்ச்சியுடன் பாலாவுக்கு நன்றி தெரிவித்து பதிவு போட்டிருந்தார். இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் பாலா திரைத்துறைக்கு இந்த வருடத்துடன் 25 வருடங்கள் நிறைவடைவதால் அதற்கு விழா எடுக்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவெடுத்திருக்கிறார்.
இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர் பாலா. குறைந்த எண்ணிக்கையிலான படங்களை அவர் இயக்கியிருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் மிகப்பெரிய பெயரை சம்பாதித்தவர். ஆனால் சமீப காலமாக அவர் தனது பெர்சனல் வாழ்க்கையிலும், கரியரிலும் சறுக்கலை சந்தித்தார். அதனை ஈடுகட்டும் விதமாக சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து சூர்யா வெளியேறினார்.

அருண் விஜய் நெகிழ்ச்சி: சூர்யா வெளியேறிய பிறகு படத்தில் ஹீரோவாக அருண் விஜய் கமிட்டானார். பல வருடங்களாக திரைத்துறையில் இருந்தாலும் அருணுக்கு பெரிய திருப்புமுனை கிடைக்காமல் இருக்கிறது. ஆனால் இந்தப் படத்தின் மூலம் அந்த திருப்புமுனை தனக்கு கிடைக்கும் என்று ஆர்வத்துடன் இருக்கிறார் அருண் விஜய். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகிறது. சமீபத்தில் படத்தை பார்த்த அருண் விஜய் நெகிழ்ச்சியுடன் பாலாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
பாலாவுக்கு விழா: இதற்கிடையே பாலா இயக்கிய முதல் படமான சேது கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது. அதன்படி இந்த வருடத்துடன் பாலா திரைக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைகின்றன. அதனையொட்டி பாலாவுக்கு விழா எடுக்க வணங்கான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கலையுலகம் உறவுகளாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பிய உலகம் மட்டுமல்ல, மகத்தான திறமையாளர்களை உறவுகளாக இணைத்துக் கொண்டு இயங்கும் ஒரு குடும்பம்.
விழுது பாலா: அனைவரின் சுக துக்கங்களிலும், பாராட்டுதலிலும், தோள் கொடுத்தலிலும், துணை இருத்தலிலும் இச்சிறு உலகம் தன்னைத்தானே செழுமைப்படுத்திக் கொள்கிறது. அன்பினால் ஆகாதது உலகத்தில் என்ன இருக்கிறது? பேரன்பு மட்டுமே உலகத்தை இயக்கும் விசை. சினிமா ஒரு பேரன்பு கொண்ட பெரும் ஆலமரம். அம்மரத்தின் விழுதுகளில் ஒரு விழுது தான் இயக்குநர் பாலா.
முகவரி ஆக்கியவர்: பலமான அந்த விழுது அம்மரத்தை உறுதியாகத் தாங்கியிருக்கிறது தனது பங்களிப்பின் மூலம். அப்படியான பங்களிப்பின் மூலம் நிறைய நாயகர்களை, கலைஞர்களை தனது இருபத்தைந்து ஆண்டு காலத்தில் உருவாக்கி உள்ளார் இயக்குநர் பாலா. அதுவரை திறமை இருந்தும் முகவரி கிடைக்காமல் தவித்தவர்களைத் தேடி எடுத்து தன் படங்களையே அவர்களது முகவரியாக ஆக்கியவர் அவர். அவர் தன் கலை உளியால் துளித்துளியாக செதுக்கிய சிற்பங்கள் தான் தமிழ்த் திரை உலகம் என்கிற ராஜகோபுரத்தில் மின்னிக் கொண்டிருக்கின்றன.
காலங்காலமாய் வாழ்பவர்கள்: பாலா என்ற தனிமனிதர் ரத்தமும் சதையுமாக உருவாக்கிய சிறிய படப்பட்டியலில் அவர் சாதித்திருப்பது நீண்ட வரிசை. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துப் போனவர்களில் அவரும் ஒருவர்.எல்லோரும் ஒரு பாணியில் கடந்து பாதை அமைத்துக் கொண்டிருக்கும்போது, தனக்கென ஒரு பாணியை அழுத்தமாக அமைத்துக் கொண்டவர். மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள், உடலால்... உடல் புலன்களால் பாதிக்கப்பட்ட எளிய மனிதர்கள், புறக்கணிக்கப்பட்ட வாழ்வில் அன்பைத் தேடி அலைபவர்கள் என அதுவரை பேசப்படாத, பாலா உருவாக்கிய செல்லுலாய்டு மனிதர்கள் காலம் காலமாய் தமிழ்த் திரையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
விழா எடுக்க முடிவு: அவர்களின் கடின வாழ்வைத் தன் அகத்தின் மூலம் பார்த்து பதிவு செய்த பாலாவின் திரை மொழி மிக அசாத்தியமானது. நாம் வாழும் காலத்தில் கலை ஆன்மா கொண்ட ஒரு மகத்தான மனிதனைக் கொண்டாடவும்... பெருமைகொள்ளச் செய்யவும் ஓடும் ஓட்டத்தில் நமக்கு நேரம் வாய்க்காமல் போயிருக்கிறது. இன்னமும் அதைக் காலம் தாழ்த்திக் கொண்டே போகக் கூடாது. அவரது இருபத்தைந்தாம் ஆண்டை விமர்சையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்.
அவருக்கு செய்யும் மரியாதை: இயக்குநர் பாலா இயக்கி, அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் "வணங்கான்" படத்தின் ஆடியோ வெளியீட்டையும், இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணத்தையும் இணைத்து இரட்டை விழாவாக டிசம்பர் 18 ஆம் தேதி அன்று மாலை 5 மணியளவில் சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடத்த உள்ளோம். இது பாலா என்கிற ஒரு தனிப்பட்ட இயக்குநருக்கான விழா மட்டுமல்ல. கால் நூற்றாண்டாக தமிழ்த் திரையை கலையம்சம் பொருந்திய தனது திரைக்காவியங்களால் நிறைத்த ஒரு மாமனிதனுக்கு நாம் செய்கிற மரியாதை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











