Vijay: விஜய்க்கு கோட் மோதிரம் பரிசாகக் கொடுத்த தயாரிப்பாளர் சிவா.. சிம்பாலிக்கா சொல்ல வருவது என்ன?
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்து பிரமாண்டமான வசூலைக் குவித்த படம் கோட். இந்தப் படம் கடந்த மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் தியேட்டரில் கிட்டத்தட்ட 500 கோடிகளை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் தியேட்டர் வசூலில் ரூபாய் 215 கோடிகளைக் கடந்துள்ளது எனவும் கூறப்படுகின்றது. தமிழ்நாட்டில் 200 கோடிகளை வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக கடந்த வாரத்தில் தெரிவித்தது. இதில் தியேட்டர் ஷேர் கலெக்ஷன் மட்டும் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் கோட் படத்தின் வெற்றியைக் குறிக்கும் வகையில் விஜய்க்கு கோட் என பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தினை தயாரிப்பாளர் சிவா வழங்கினார்.
தயாரிப்பாளர் சிவா தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட தயாரிப்பாளர் ஆவார். இவர் சரோஜா, அரவான் போன்ற பல்வேறு ஐகானிக் படங்களைத் தயாரித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் படங்களில் நடித்தும் வருகின்றார். அண்மையில் வெளியான விஜய்யின் கோட் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தளபதி 69 படத்தினை கே.வி. என் புரடெக்ஷன்ஸ் தயாரிக்கின்றது. மேலும், படத்தினை ஹெச். வினோத் இயக்குகின்றார். படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியா மணி, நரேன், பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். இந்நிலையில் படத்தின் பூஜை நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
மோதிரம்: நடிகர் விஜய் தனது கடைசிப் படமான தளபதி 69 படத்தின் பூஜையில் கலந்து கொண்டார். அந்த பூஜையில் தயாரிப்பாளர் சிவாவும் கலந்து கொண்டார். அப்போது தயாரிப்பாளர் சிவா விஜய்க்காக ஏற்கனவே பிரத்யேகமாக, தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரத்தை அணிவித்து அழகு பார்த்தார். மேலும் அந்த மோதிரத்தில் கோட் என ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. தயாரிப்பாளர் சிவா சர்ப்ரைஸாக அணிவித்த மோதிரத்தை அணிந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
காரணம்: இந்த மோதிரத்தை கோட் படத்தின் பிரமாண்டமான வெற்றியைக் குறிக்கும் வகையில் பரிசாகக் கொடுத்துள்ளார். மேலும் பேட்டி ஒன்றில் கோட் படம் குறித்தும் விஜய் குறித்தும் தயாரிப்பாளர் சிவா கூறியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. தமிழ்நாட்டில் ஒரு படம் 200 கோடி வசூல் சாதனை படைத்தப் படம் என்றால் அது கோட்தான். மேலும், படம் தியேட்டரில் வசூல் செய்தது 200 கோடிகள் என்றாலும், தியேட்டர் ஷேர் மட்டும் 100 கோடி ரூபாய். இதற்கு முன்னர் எந்தப் படமாவது தமிழ்நாட்டில் தியேட்டரிக்கல் ஷேரில் ரூபாய் 100 கோடி வசூல் செய்துள்ளதா எனப் பேசினார். இதனால்தான் தயாரிப்பாளர் சிவா விஜய்க்கு மோதிரம் அணிவித்திருப்பார் எனக் கூறப்படுகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் விஜய் என்றைக்கும் கோட் தான் என்பதை சொல்லும் விதமாகவும் கொடுத்திருப்பார் எனக் கூறப்படுகின்றது.
பூஜை: நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தினை கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். கடந்த மாதமே கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநில மாநாடு இந்த மாதம் நடைபெறவுள்ளதாக விஜய்யே அறிவித்தார். இதனால் மாநாட்டுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று மாநாடு சிறப்பாக நடைபெற, பந்தகால் நடும் விழா நடைபெற்றது. மேலும் பூமி பூஜையும் செய்யப்பட்டது. இதில் தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது.


Click it and Unblock the Notifications











