சினிமாவில் கந்துவட்டி - தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம்!
சென்னை : கந்துவட்டி பிரச்னையால் சசிகுமாரின் மைத்துனரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தற்கொலைக்கு காரணம் தயாரிப்பாளரும், சினிமா ஃபைனான்சியருமான அன்புசெழியன் தான் என்பதால் இன்னும் பரபரப்பு அதிகரித்துள்ளது. அன்புச்செழியன் தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார்.
அன்புசெழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரைத்துறையினர் அணி திரண்டுள்ளனர். இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் 30-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

அன்புச்செழியனுக்கு ஆதரவு
கலைப்புலி எஸ்.தாணு, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, விஜய் ஆண்டனி, தேவயானி, சுந்தர்.சி உள்ளிட்டோர் அன்புச்செழியனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஃபைனான்சியர்கள் இல்லை என்றால் தமிழ் சினிமஅவே இயங்காது என்பது இவர்களின் வாதமாக இருக்கிறது.

அன்புச்செழியனுக்கு எதிர்ப்பு
அன்புச்செழியனுக்கு எதிரானவர்கள் அணியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ஞானவேல்ராஜா, கார்த்தி, சி.வி.குமார், கரு.பழனியப்பன், உள்பட பலர் இருக்கிறார்கள். அன்புச்செழியனுக்கு எதிரான கருத்துகளை இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

அவசர ஆலோசனைக் கூட்டம்
இந்த நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக்கூட்டம் வருகிற 30-ம் தேதி நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் சினிமாவை ஆட்டிப் படைக்கும் கந்துவட்டி பிரச்னை பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது.

காரசார விவாதம்
கந்துவட்டியை சினிமாவை விட்டு ஒழித்தால், தயாரிப்பாளர்களின் பணப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்தும் விவாதிக்க இருக்கிறார்கள். கந்துவட்டிக்கு ஆதரவும், எதிர்ப்பும் தயாரிப்பாளர்களிடையே இருப்பதால் கூட்டத்தின் விவாதம் காரசாரமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

முக்கிய முடிவு
இந்தக் கூட்டத்தில் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படக்கூடும். தயாரிப்பாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்திருப்பதால் கூட்டத்தில் சலசலப்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











